மாவட்ட செய்திகள்

மொடக்குறிச்சி, பங்களாப்புதூர் அருகே விபத்து: 3 பேர் பரிதாப சாவு + "||" + Accident: 3 people Death

மொடக்குறிச்சி, பங்களாப்புதூர் அருகே விபத்து: 3 பேர் பரிதாப சாவு

மொடக்குறிச்சி, பங்களாப்புதூர் அருகே விபத்து: 3 பேர் பரிதாப சாவு
மொடக்குறிச்சி, பங்களாப்புதூர் அருகே நடந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தார்கள்.

மொடக்குறிச்சி,

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல்லா (வயது 30). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகி விவகாரத்து பெற்றவர். பவானி பெரியார் நகரை சேர்ந்தவர் ராணி (44). இவருடைய கணவர் இறந்துவிட்டார். கட்டிட வேலைகளுக்கு சென்றுவந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்துல்லாவும், ராணியும் கரூர் மாவட்டம் அறவக்குறிச்சியில் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டு இரவு 10.30 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார்கள். அப்துல்லா வண்டியை ஓட்டினார். ராணி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

மொடக்குறிச்சி அருகே உள்ள சாவடிப்பாளையம்புதூர் என்ற இடத்தில் வந்தபோது, ஈரோட்டில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற சுற்றுலா பஸ்சும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட அப்துல்லாவும், ராணியும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். விபத்து ஏற்பட்டதும் சுற்றுலா பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று முன்தினம் இரவு அப்துல்லா இறந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த ராணியும் நேற்று காலை இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுற்றுலா பஸ் டிரைவர் பவானியை சேர்ந்த கனகராஜ் என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதேபோல் பங்களாப்புதூர் அருகே நடந்த விபத்தில் வாலிபர் ஒருவர் இறந்தார். அதன் விவரம் வருமாறு:–

கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 25). திருமணம் ஆகாதவர். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மணிமாறன் தையல் கடையில் கொடுத்திருந்த தன்னுடைய துணிகளை வாங்குவதற்காக மோட்டார்சைக்கிளில் பங்களாப்புதூர் சென்றார். அவருடன் அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அரக்கன்கோட்டையை சேர்ந்த நேசமுத்து (28) என்பவரும் உடன் சென்றார்.

வண்டியை மணிமாறன் ஓட்டினார். பங்களாப்புதூர் அருகே ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு வேனும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் மணிமாறனும், நேசமுத்துவும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே மணிமாறன் இறந்தார். நேசமுத்து முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்பட்டதும் தப்பி ஓடிய வேன் டிரைவர் அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.