கோவில்பட்டியில் லாரி-மொபட் மோதல்: போலீஸ்காரரின் மனைவி-மகள் சாவு


கோவில்பட்டியில் லாரி-மொபட் மோதல்: போலீஸ்காரரின் மனைவி-மகள் சாவு
x
தினத்தந்தி 11 Aug 2018 10:45 PM GMT (Updated: 11 Aug 2018 8:15 PM GMT)

கோவில்பட்டியில் லாரி-மொபட் மோதிய விபத்தில் போலீஸ்காரரின் மனைவி-மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு சிறுமி படுகாயம் அடைந்தாள்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 33). இவர் மணிப்பூர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாரிசெல்வி (30). இவர்களுக்கு மனோ பவன் (7) என்ற மகனும், ஜெயஸ்ரீ (5) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று மாலை 4.30 மணிக்கு மாரிசெல்வி தன்னுடைய மகள் ஜெயஸ்ரீ மற்றும் அண்ணன் பாப்புராஜின் மகள் மதுபாலா (4) ஆகியோருடன் மொபட்டில் கோவில்பட்டி-எட்டயபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அங்குள்ள அரசு ஊழியர் குடியிருப்பு சந்திப்பு பகுதியில் உள்ள ஓடைப்பாலத்தில் சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட்டின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் மாரிசெல்வி, ஜெயஸ்ரீ, மதுபாலா ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். மாரிசெல்வியின் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெயஸ்ரீ, மதுபாலா ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

படுகாயம் அடைந்த ஜெயஸ்ரீ, மதுபாலா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். மதுபாலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்த மாரிசெல்வியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான கரூர் மாவட்டம் புரணியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனை (44) கைது செய்தனர். விபத்தில் இறந்த தாய்- மகளின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story