இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 12 Aug 2018 4:45 AM IST (Updated: 12 Aug 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள ஏம்பவயல் கிராமத்தில் இருந்து, தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் இங்கு தங்கி இருந்து மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் அதிகாலை ஏம்பவயல் பகுதியிலிருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியை சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் வில்லாயுதம் (வயது 48), பாலா (45), கரண்(19), செங்கமுத்து (42), விக்கி(20), முத்துகாளி(25), ராஜூ(35), பாலா(39) ஆகிய 8 பேரும், கிருஷ்ணன்(47) என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் அவரும், லோகமுத்து(65), பாலா(43), முத்துமாரி(23), அபுதாகிர்(50), ராக்கு(28), பவித்ரன்(18) ஆகிய 7 பேரும், ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் குமரன்(34), சந்தானமேரி(39), பஞ்சநாதன்(51), ராஜாராம்(41), காளிதாஸ்(35), கருப்பையா(40), ராமு(30) ஆகிய 7 பேரும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த கணேசன்(48) என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் அவரும், நந்தகுமார்(25), ரமேஷ் (20), பரமசிவம்(38), செந்தூர்பாண்டியன் (65) ஆகிய 5 பேரும் என மொத்தம் 4 நாட்டுப்படகுகளில் 27 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நெடுந்தீவு அருகே 27 பேரும் நேற்று முன்தினம் மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறிய ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 27 மீனவர்களையும், எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்தனர். மேலும் 4 நாட்டுப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 27 மீனவர்களையும் கைது செய்து, காங்கேசன் ராணுவ முகாமிற்கு கொண்டு சென்று ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 27 நாட்டுப்படகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாட்டுப்படகு மீனவர்கள் சங்க தலைவர் குப்பவேல் கூறுகையில், “நாங்கள் தினமும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறோம். இந்தநிலையில் எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 4 நாட்டுப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Next Story