மாவட்ட செய்திகள்

கன்னியக்கோவிலில் தீமிதி திருவிழாவில் இருதரப்பினர் மோதல், 5 பேர் கைது + "||" + Confrontation in Temple Festival 5 people arrested

கன்னியக்கோவிலில் தீமிதி திருவிழாவில் இருதரப்பினர் மோதல், 5 பேர் கைது

கன்னியக்கோவிலில் தீமிதி திருவிழாவில் இருதரப்பினர் மோதல், 5 பேர் கைது
கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் இருதரப்பினர் திடீரென்று மோதிக்கொண்டனர். இது தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்,

கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் கிராமத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 2–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் கன்னியக்கோவில், நரம்பை, கிருமாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறக்கி நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவையொட்டி கிருமாம்பாக்கம் போலீசார் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

விழா நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த வாலிபர்களும், மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர்களும் திடீரென்று மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக்கொண்டதால் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் விரட்டியடித்தனர். இந்த மோதலில் தொடர்புடைய வார்கால் ஓடை புதுநகரை சேர்ந்த வசந்தகுமார் (வயது 19), ராயப்பன் (24), கலைச்செல்வன் (27) மற்றும் மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயமூர்த்தி (24), அருண்ராஜ் (19) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் தொடர்புடைய இருதரப்பை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று இரண்டு கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகணேஷ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.