வாகன பதிவு சான்றிதழ் வழங்காமல் அழைக்கழிப்பு: காய்கறி வியாபாரிக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
வாகன பதிவு சான்றிதழ் வழங்காமல் அழைக்கழிக்கப்பட்ட காய்கறி வியாபாரிக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தனியார் நிதிநிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் கூத்தப்பாக்கம் விஜயலட்சுமிநகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று மினி லாரி வாங்கினார். அதற்கான தொகையை தவணை முறையில் கண்ணன் கட்டி முடித்தார். பின்னர் வாகனத்துக்கான ஆவணத்தில் கடன் பதிவை ரத்து செய்து, வாகன பதிவு சான்று, வங்கியில் செலுத்தாத காசோலைகள் ஆகியவற்றை திருப்பி தரும்படி தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கண்ணன் கேட்டார். ஆனால் அவர்கள் கொடுக்காமல் கண்ணனை அலைக்கழிப்பு செய்தனர்.
இது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் நிஜாமுதீன் மூலம் கடலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கண்ணன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமிகாந்தம், உறுப்பினர்கள் எழிலரசி மற்றும் பாபு ஆகியோர் வாகன பதிவு சான்று, பயன்படுத்தாத 3 காசோலைகள் ஆகியவற்றை கண்ணனிடம் திருப்பி கொடுக்கவும், அவருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு, முறையீட்டு செலவுக்கு ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என தனியார் நிதி நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.