மேட்டுப்பாளையம் சாலை எல்.எம்.டபிள்யூ பிரிவில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு மண் பரிசோதனை பணி நிறைவு


மேட்டுப்பாளையம் சாலை எல்.எம்.டபிள்யூ பிரிவில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு மண் பரிசோதனை பணி நிறைவு
x
தினத்தந்தி 13 Aug 2018 3:30 AM IST (Updated: 13 Aug 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் சாலை எல்.எம்.டபிள்யூ பிரிவில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை செய்யும் பணி நிறைவடைந்தது.

இடிகரை,

கோவையில் முக்கிய சாலைகளில் ஒன்றாக மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி, மைசூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் கோடைகால விடுமுறையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவு இருக்கும்.

இதன்காரணமாக இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்து நெருக்கடி உள்ள சாலையாக இருந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 2 வழிச்சாலையாக இருந்தது. இதனை தொடர்ந்து ரூ.50 கோடி மதிப்பில் பூமார்க்கெட்டில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இதற்காக சாலையோரம் இருந்த 850 மரங்கள் அகற்றப்பட்டன.

ஆனாலும் இந்த சாலையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சாய்பாபா காலனி சந்திப்பு, கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், துடியலூர் சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய சந்திப்பு பகுதிகளில் பாலங்கள் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டன. அதில் ஏற்கனவே ஜி.என்.மில்ஸ், கவுண்டம்பாளையம் ஆகிய 2 இடங்களில் மட்டும் பாலங்கள் அமைக்க திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது.

தற்போது பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பாலங்கள் அமைக்க திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது:–

மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை தற்போது ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல் வண்ணாங்கோவில் வரை மேட்டுப்பாளையம் ரோட்டில் 1.2 கிலோ மீட்டர் தூரம் வரை 2018–19 ஆண்டு திட்டத்தின் படி ரூ.85 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு மேம்பாலம் அமைக்கப்படும்போது, 7.5 மீட்டர் அளவில் 2 ரோடுகள் புதிதாக போடப்படும். அதே நேரம் பாலத்தின் அடியில் 3 மீட்டர் வரை பாலத்துக்கான பீம் வருவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அருகே உள்ள ஊருக்குள் செல்ல புதிய சாலைகள் அமைக்கப்படும். அதற்காக புதியதாக அமைக்கப்படும் மேம்பால பகுதியில் 800 மீட்டர் தூர அளவில் மண் பரிசோதனை எல்.எம்.டபிள்யூ பிரிவு மற்றும் சொக்கலிங்கேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது.

இந்த பரிசோதனையில் பூமிக்கு அடியில் மண், பாறை, பாறை அடுக்குகள், கரும்பாறை என 10 மீட்டர் வரை மண் எடுக்கப்பட்டு அதனை ஆய்வு செய்வோம். அதன்பின் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை தொடர்ந்து மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறியதாவது:–

மேட்டுப்பாளையம் சாலை வழியாக கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் மைசூரு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதற்காக இந்த சாலையை உலக தரம் வாய்ந்த சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை ரூ.850 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போது பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை நடைபெற்றது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்கனவே கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் பகுதியில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 3 மாதங்களில் புதிய மேம்பால பணிகள் தொடங்கும் என்று கூறினர். ஆனால் இதுவரை எந்த வேலைகளும் தொடங்கப்படவில்லை. மேலும் புதிய மேம்பாலம் கட்ட ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவில்லை. தற்போது மண் பரிசோதனை நிறைவு பெற்று உள்ளதால் மேம்பால பணியை விரைவாக தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story