சிங்காநல்லூர் அருகே பஞ்சு மில்லில் தீவிபத்து; ரூ.40 லட்சம் பொருட்கள் நாசம்


சிங்காநல்லூர் அருகே பஞ்சு மில்லில் தீவிபத்து; ரூ.40 லட்சம் பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 13 Aug 2018 4:00 AM IST (Updated: 13 Aug 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

சிங்காநல்லூர் அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

சிங்காநல்லூர்,

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 50). இவர் சொந்தமாக பஞ்சு மில் நடத்தி வருகிறார். இந்த பஞ்சு மில்லில் உள்ள குடோனில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை பஞ்சு மில்லின் குடோனில் திடீரென தீப்பிடித்தது. பஞ்சியில் எரிந்த தீ சற்று நேரத்தில் மள மள வென பரவி குடோனில் இருந்த எந்திரங்களில் பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமாரசாமி தலைமையில், தீயணைப்பு படையினர் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர். தொடர்ந்து தண்ணீரை பீச்சிஅடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் எரிந்த நாசமான பஞ்சுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதில் குடோனில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story