மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: பஸ் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை
சுதந்திர தினத்தையொட்டி மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையொட்டி புதுவை பஸ் நிலையத்தில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
புதுச்சேரி,
நாடு முழுவதும் வருகிற 15–ந் தேதி சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தின விழா நடைபெறும் உப்பளம் விளையாட்டு மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.
புதுவை புதிய பஸ் நிலையத்தில் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் தனசெல்வம் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினார்கள். போலீசார் 2 குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர்.
அப்போது வெளியூர்களில் இருந்து புதுவைக்கு வரும் பயணிகளின் உடமைகளை ஒரு குழுவினரும், புதுவை பஸ் நிலையத்தில் இருந்த பயணிகளின் உடைமைகளை மற்றொரு குழுவினரும் சோதனையிட்டனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.