டி.என்.பாளையம் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


டி.என்.பாளையம் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 14 Aug 2018 5:30 AM IST (Updated: 13 Aug 2018 10:49 PM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் கேசவராஜ். பெயிண்டர். இவருடைய மனைவி தேன்மொழி (வயது 25). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பவித்ரன் (3) என்ற மகனும் பிரணவர்‌ஷன் என்ற 3 மாத கைக்குழந்தையும் உள்ளனர். குழந்தை பெறுவதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டி.என்.பாளையம் அருகே அனுமன் நகரில் உள்ள தன்னுடைய தாய் மகேஸ்வரி வீட்டுக்கு தேன்மொழி வந்தார். குழந்தை பிறந்ததும் அங்கேயே தங்கி இருந்தார்.

கேசவராஜ் அவ்வப்போது அனுமன் நகர் சென்று தேன்மொழியையும் தனது குழந்தையையும் பார்த்து வந்தார். ஆனால் பவித்ரன் சென்னிமலையில் உள்ள கேசவராஜின் வீட்டில் தங்கி இருந்தான். தேன்மொழி சில ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.

மகேஸ்வரி நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். எனவே வீட்டில் தேன்மொழியும், 3 மாத கைக்குழந்தையும் தனியாக இருந்து உள்ளனர். 9.30 மணி அளவில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து திடீரென தேன்மொழி தன் மீதும், கைக்குழந்தை மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடலில் தீப்பற்றியதும் வலி தாங்க முடியாமல் தேன்மொழி அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தேன்மொழியின் வீட்டுக்கு ஓடி வந்தனர். உடனே அவர்கள் கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டுப்போட்டு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர்களால் வீட்டை திறக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் வீட்டின் மேல் பகுதிக்கு ஏறி சென்று சிமெண்டு மேற்கூரையை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது தேன்மொழி மற்றும் அவருடைய கைக்குழந்தை உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) செல்வம், பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேன்மொழி மற்றும் அவருடைய கைக்குழந்தை உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தேன்மொழிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ. அசோகனும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story