திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை


திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2018 11:30 PM GMT (Updated: 13 Aug 2018 7:01 PM GMT)

சுடுகாட்டு பகுதியில் தொடங்கப்பட உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

திருப்பூர் 10 மற்றும் 11-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த 2 வார்டுகளுக்கும் பொதுவாக தியாகி பழனிசாமி நகரில் சுடுகாடு ஒன்று அந்த பகுதியில் உள்ளது. இதை அந்த பகுதியில் உள்ளவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரித்தல் பணி என்பது மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைத்தால் காற்று மாசுபடும். சுவாச கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள் ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை குறிப்பிட்ட வார்டுகளில் உள்ள பொதுமக்கள் நலன் கருதி தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், சீர் செய்யப்படாமல் உள்ள சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் இடுவம்பாளையம் அருகே உள்ள நிலத்தை வஞ்சிபாளையத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் அவருடைய மனைவி மற்றும் உதவியாளர் மணி என்பவர்கள் இணைந்து வீட்டுமனைகளாக விற்பனை செய்தனர். இதை நம்பிய 30-க்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணையாக ரூ.3 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்த விசாரணையில் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என தெரியவந்தது. கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டால் அதற்கு சரியான பதில் அளிக்காமல் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் எங்கள் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதுடன், அரசு நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் நீதிமய்யத்தின் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பொறுப்பாளர் கமல்ஜீவா மற்றும் அவினாசி, காங்கேயம் பொறுப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தின்படி வருகிற 15-ந்தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். அது முறையாக நடத்தப்படுவதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். கிராம சபை கூட்டத்தை வீடியோ எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். வரவு-செலவு அறிக்கை, தணிக்கை அறிக்கை திட்ட அறிக்கை என அனைத்து ஆவணங்களும் மக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story