தடையை மீறி காவிரி ஆற்றில் குளித்த 8 பேர் கைது


தடையை மீறி காவிரி ஆற்றில் குளித்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2018 3:45 AM IST (Updated: 14 Aug 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி காவிரி ஆற்றில் குளித்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகளவில் இருப்பதால், கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் யாரும் குளிக்க கூடாது என்றும், படித்துறைகளில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க கூடாது என்றும், தண்டோரா மூலமும், அறிவிப்பு பலகை மூலமும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், காவிரி ஆற்று படித்துறைகளில் தடுப்பு கம்பிகளுக்குள் மட்டுமே குளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதனையும் மீறி தடுப்புக்கம்பிகளுக்கு மேல் ஏறி, ஆற்றில் குதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதமாக, நீச்சல் அடித்து குளித்த நபர்களுக்கு பலமுறை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால் அதை கேட்காததால், நேற்று முன்தினம் திருச்சி கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தில்லைநாயகம் படித்துறை, ஓடத்துறை உள்பட பல்வேறு இடங்களில் 8 பேர் காவிரி ஆற்றில் ஆபத்தான இடத்தில் குளித்துள்ளனர். அவர்களின் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து கடந்த சில வாரங்களாக காவிரி ஆற்றில் குளிக்க சென்றவர்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். எனவே உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாமென தடைவிதிக்கப்பட்டு இருந்தது தெரிந்தும், பொதுமக்கள் காவிரி ஆற்றில் தொடர்ந்து தடையை மீறி குளித்து வருகிறார்கள். மேலும், பொதுமக்கள் தடுப்புக்கம்பிகளை தாண்டி அத்துமீறி காவிரி ஆற்றில் குளிக்க முயற்சித்தால் சம்பந்தப்பட்டவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை காவிரி ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

Next Story