மேட்டூர் அணை நிரம்பி உள்ளதால் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது அமைச்சர் தகவல்


மேட்டூர் அணை நிரம்பி உள்ளதால் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:00 AM IST (Updated: 14 Aug 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பி உள்ளதால் பாசனத்திறக்காக ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறு கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது. இதனால் இப்பகுதியில் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் வாய்மேடு அருகே வாட்டாகுடியில் உள்ள வயல்களில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டார். அப்போது அவர் வயலில் இறங்கி நெல் விதைகளை தெளித்தார். இதேபோல தலைஞாயிறு பகுதியில் நடைபெற்று வரும் சம்பா சாகுபடி பணிகளை பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் முதல் கோடியக்கரை உள்ள ஆறுகள், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பி உள்ளதால் பாசனத்திற்காக ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கடலுக்கு சென்று கலந்து வீணாகாமல் இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரின் அளவை கண்காணித்து வருகின்றனர். வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் இன்னும் இரண்டு நாட்களில் ஆற்றின் கடைமடை பகுதிகளுக்கு செல்லும் அளவிற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 

Next Story