கடைமடை பகுதிகளுக்கு 2 நாளில் தண்ணீர் சென்றடையும் கலெக்டர் தகவல்


கடைமடை பகுதிகளுக்கு 2 நாளில் தண்ணீர் சென்றடையும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:30 AM IST (Updated: 14 Aug 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

கடைமடை பகுதிகளுக்கு 2 நாளில் தண்ணீர் சென்றடையும் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

தஞ்சாவூர்,

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இந்த ஆண்டு 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து காவிரியில் அதிகஅளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்திலும் அதிக அளவு திறக்கப்பட்டுள்ளது.

கல்லணையில் இருந்தும் கொள்ளிடத்தில் 23 ஆயிரத்து 310 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொள்ளிடத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம், கல்லணை முதல் திருவையாறு வரை கொள்ளிடம் ஆற்றங்கரையிலும், தஞ்சாவூர் ஒன்றியம் ஆலக்குடி மற்றும் கல்விராயன்பேட்டை பகுதிகளில் கல்லணைக் கால்வாயிலும் தண்ணீர் செல்வதை கலெக்டர் அண்ணாதுரை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஆய்வு செய்த கலெக்டர் அண்ணாதுரை, ஆற்றில் குளித்து கொண்டிருந்த சிறுவர்களையும், கரையோரம் நின்று கொண்டிருந்த சிறுவர்களையும், துணி துவைத்து கொண்டிருந்த பெண்களையும், ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தினார். ஆற்றங்கரையோரம் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

தஞ்சை ஒன்றியம், ஆலக்குடி மற்றும் கல்விராயன்பேட்டை பகுதிகளில் கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்ட பகுதியை அவர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பூதலூர் வட்டம், அய்யனாபுரம் வாரி மற்றும் கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள அளவு குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், வேளாண்துறை இணை இயக்குனர் (பொ) ஜஸ்டின், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

முன்னதாக கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் சென்றுகொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 9,500 கன அடியும், வெண்ணாற்றில் 9,500 கன அடியும், கல்லணைக்கால்வாயில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. கல்லணைக்கால்வாய் கரைகள் பலமாக உள்ளதா? என அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் வெள்ளத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2 நாட்களில் தண்ணீர் சென்றடையும் என எதிர்பார்க்கப் படுகிறது”என்றார். 

Next Story