அரசு மருத்துவமனையில் தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்திய வாலிபர்


அரசு மருத்துவமனையில் தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்திய வாலிபர்
x
தினத்தந்தி 14 Aug 2018 3:00 AM IST (Updated: 14 Aug 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற தொழிலாளியை, வாலிபர் கத்தரிக்கோலால் குத்தியதால் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

திண்டுக்கல், 



திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 55). இவர் மொத்த வியாபார கடைகளில் இருந்து யாரேனும் பொருட்களை வாங்கினால், அதனை தள்ளுவண்டியில் ஏற்றி சம்பந்தப்பட்ட இடங்களில் கொண்டு இறக்கும் வேலை செய்து வருகிறார். அவர் தன்னுடைய தள்ளுவண்டியை திண்டுக்கல்- தாடிக்கொம்பு சாலையில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே நிறுத்துவது வழக்கம்.

திண்டுக்கல் சத்தியமூர்த்திபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் விக்னேஷ் (24). இவர், தனபாலின் தள்ளுவண்டியில் ஏறி அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று வழக்கம் போல தனபால், தள்ளுவண்டியை அய்யப்பன் கோவில் முன்பு நிறுத்தியுள்ளார்.

அப்போது அங்கு வந்த விக்னேஷ், தள்ளுவண்டியில் படுத்ததாக தெரிகிறது. இதனை தனபால் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த தனபால், தள்ளுவண்டியில் இருந்த கத்தியை எடுத்து விக்னேசின் கையில் கீறியதாக தெரிகிறது. மேலும் விக்னேஷ் தாக்கியதில் தனபால் காயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்த போது அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்த விக்னேஷ், திடீரென தனபாலின் முதுகில் குத்தினார். இதனை பார்த்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் இருவரையும் தனித்தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story