தஞ்சை புறவழிச்சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


தஞ்சை புறவழிச்சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 14 Aug 2018 3:45 AM IST (Updated: 14 Aug 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பை-பாஸ் சாலையோரம் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரம் சுற்றுலா நகரமாக திகழ்ந்து வருகிறது. இங்கு உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில், அரண்மனை, சரசுவதி மகால் நூலகம், அருங்காட்சியகம் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தஞ்சையில் 1995-ம் ஆண்டு உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது தஞ்சையில் புதிய பஸ் நிலையம், மேம்பாலங்கள், நுழைவு வாயில்கள், மணிமண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதே போல் தஞ்சையை சுற்றி புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டது.

இந்த புறவழிச்சாலை திருச்சியில் இருந்து வருபவர்களும், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், நாகை, கும்பகோணம் போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் தஞ்சை நகருக்குள் வராமல் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. குறிப்பாக தஞ்சை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

அதன்படி இந்த புறவழிச்சாலை வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த புறவழிச்சாலையில் விளார்பாலம் அருகே சாலை ஓரத்தில் இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளது. அதிலும் கோழி இறைச்சி கழிவுகள் சாலை ஓரத்தில் நீண்ட தூரம் கொட்டப்பட்டுள்ளது.

அதுவும் தஞ்சை மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்தும் இங்கு கொண்டு வந்து கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. தினமும் கொட்டப்படுவதால் அந்த பகுதி முழுவதும் கோழி இறைச்சி கழிவுகளாகவே காணப்படுகின்றன. இதனை நாய்கள், பன்றிகள் தின்பதோடு கிளறியும் விடுகிறது. இதனால் சில நேரங்களில் சாலைகளுக்கும் இறைச்சி கழிவுகள் வந்து விடுகின்றன. இதனால் கோழி இறைச்சிகழிவுகளும் சாலைகளுக்கு வந்து விடுகின்றன. மேலும் சாலை ஒரத்தில் நடமாட முடியாத அளவிற்கு துர்நாற்றமும் வீசுகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை ஓரத்தில் இறைச்சி கழிவு கொட்டுபவர்களுக்கு உரிய அபராதம் விதித்து இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர். 

Next Story