தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் எச்.ராஜா பேட்டி


தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 14 Aug 2018 4:45 AM IST (Updated: 14 Aug 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்.ராஜா கூறினார்.

குளித்தலை,

பாரதீய ஜனதா கட்சியின் குளித்தலை சட்டமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் மத்திய அரசின் பல திட்டங்கள் 22 கோடி குடும்பங்களுக்கு சென்றடைந்துள்ளது. பா.ஜ.க. தவிர எந்த ஒரு அரசும் மக்கள் முன்னேற்ற திட்டங்கள் மூலமாக சென்றடைந்தது இல்லை. ஆயுஸ்மான் பாரத் யோஜனா திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 10 கோடியே 74 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய் பிரீமியத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவம் செய்துகொள்ளும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் அறிவிக்கவுள்ளார்.

பா.ஜ.க. எதிர்ப்பு என்ற வாதம் தவிர வேறு எந்த கொள்கை, கருத்தொற்றுமை இல்லாத கிச்சடி அரசு வரக்கூடாது என்ற செய்தி மக்களுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. கடந்த 20 மாதங்களுக்கு உள்ளாக இரண்டு மிகப்பெரிய அரசியல் ஆளுமைகளான ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரும் காலமாகிவிட்டனர். தமிழக மக்கள் முன்பாக இருக்கும் ஒரே அரசியல் ஆளுமை பிரதமர் நரேந்திர மோடிதான். இதன் தாக்கம் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை பா.ஜ.க. ஏற்படுத்தும். தமிழக அரசு அறிவித்துள்ள 38 ஆயிரத்து 648 கோவில்களில் 10 ஆயிரம் கோவில்கள் இல்லை. கோவில் இருந்த இடத்தில் பலவகையான கடைகள் உள்ளன. அறநிலையத்துறை அரசு கையில் இருப்பதால் இந்து மதத்திற்கு மிகப்பெரிய அழிவு வந்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து பா.ஜ.க. அகில இந்திய தலைமை அக்டோபரில் அறிவிப்பார்கள். தமிழகத்தில் திட்டமிட்ட வன்முறை, தேசிய விரோதம் உள்ளது. எனவே தமிழகத்தில் பயங்கரவாத, நக்சலைட் கும்பல்கள், மதவாத பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன், பெரம்பலூர் பாராளுமன்ற அமைப்பாளர் சிவசுப்பிரமணியன், கோட்ட பொறுப்பாளர் சிவசாமி, கரூர் மாவட்ட தலைவர் முருகானந்தம், துணைத்தலைவர் ராமநாதபிள்ளை, குளித்தலை ஒன்றிய இளைஞரணி தலைவர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக குளித்தலை ஒன்றிய தலைவர் வீரமணி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொது செயலாளர் கைலாசம் நன்றி கூறினார்.

Next Story