கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு ஷைனாவுக்கு 17 வழக்குகளிலும் ஜாமீன்
கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு ஷைனாவுக்கு 17 வழக்குகளில் ஜாமீன் கிடைத்து உள்ளது.
கோவை,
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே பதுங்கி இருந்த மாவோயிஸ்டு தலைவர் ரூபேஷ், அவரது மனைவி ஷைனா மற்றும் அனூப், வீரமணி, கண்ணன் ஆகிய 5 பேரை கடந்த 2015–ம் ஆண்டு கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் போலி ஆவணங்கள் தயாரித்து சிம்கார்டுகள் வாங்கிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட கோர்ட்டுகளுக்கு போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று அவர்களை ஆஜர்படுத்தினார்கள்.
இதற்கிடையில் ரூபேஷ் மட்டும் கேரள மாநிலம் திருச்சூர் சிறைக்கு மாற்றப்பட்டார். மற்ற 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஷைனாவை ஜாமீனில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் அவரது தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.
ஷைனா கைது செய்யப்பட்ட போது அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் கேரளாவில் ஒரு வழக்கு என இரண்டு வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அதன் பின்னர் போலீசார் வரிசையாக வழக்குகளை பதிவு செய்தனர்.
தற்போது ஷைனா மீது தமிழகத்தில் 11 வழக்குகளும், கேரளாவில் 6 வழக்குகளும் என மொத்தம் 17 வழக்குகள் உள்ளது. இதில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் தயாரித்து சிம்கார்டுகள் வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தான்.
இந்த நிலையில் 17 வழக்கிலும் ஷைனாவுக்கு ஜாமீன் கிடைத்தது. எனினும் கேரளாவில் ஜாமீன் கிடைத்தற்கான நகல் கோவைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஷைனாவுக்கு எதிரான அனைத்து வழக்கிலும் ஜாமீன் கிடைத்து உள்ளதால் அவர் இன்னும் ஓரிரு நாளில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.