முதன்முறையாக 3 துறை அதிகாரிகள் இணைந்து ஊட்டியில் வாகன சோதனை


முதன்முறையாக 3 துறை அதிகாரிகள் இணைந்து ஊட்டியில் வாகன சோதனை
x
தினத்தந்தி 14 Aug 2018 3:30 AM IST (Updated: 14 Aug 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் முதன்முறையாக 3 துறை அதிகாரிகள் இணைந்து வாகன சோதனை நடத்தினர். அதில் விதி மீறல்களில் ஈடுபட்ட 3 வாகன உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

ஊட்டி,

மலைப்பிரதேசமான நீலகிரி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. நீலகிரிக்கு சீசன் மற்றும் சீசன் அல்லாத காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. நாளை(புதன்கிழமை) சுதந்திர தின விழாவையொட்டி தனியார் அலுவலகங்கள், பள்ளி– கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், ஊட்டிக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை, ஈரோடு, சென்னை, சேலம் போன்ற மாவட்டங்களில் வாகன சோதனை செய்ய வாகன போக்குவரத்து ஆய்வாளர்கள்(செயலாக்கம்) செயல்படுவது போல, நீலகிரி மாவட்டத்துக்கும் கடந்த ஜூலை மாதம் புதிய வாகன போக்குவரத்து ஆய்வாளர்(செயலாக்கம்) நல்லதம்பி நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார். அவர் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, மஞ்சூர், பந்தலூர், எருமாடு உள்ளிட்ட இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போக்குவரத்து போலீசார், வாகன போக்குவரத்து ஆய்வாளர் (செயலாக்கம்), மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன் இணைந்து வாகன சோதனை நடத்த வேண்டும் என்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து ஊட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், வாகன போக்குவரத்து ஆய்வாளர் (செயலாக்கம்) நல்லதம்பி மற்றும் அதிகாரிகள் ஊட்டி–குன்னூர் சாலையில் நேற்று திடீர் வாகன சோதனை நடத்தினார்கள். அதில் வாகன பெர்மிட், காப்பீடு, தகுதி சான்று ஆகிய ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்றும், அதிக பாரம் ஏற்றி வரப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாசு ஏற்படும் வகையில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களை புகை பரிசோதனை நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திலேயே முதன்முறையாக மூன்று துறைகள் இணைந்து ஊட்டியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சாலை விபத்துகளை தடுக்கவும், உரிய ஓட்டுனர் உரிமம் பெற்று வாகனங்கள் இயக்கப்படுகிறதா? என்பதை கண்டறியவும் சோதனை நடந்தது.

சுற்றுலா வாகனத்தில் அதிக பயணிகளை ஏற்றி வந்தது, சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தியது உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்ட 3 வாகன உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story