ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2018 5:19 AM IST (Updated: 14 Aug 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அந்த பஸ்சில் கஞ்சா மூட்டைகளுடன் 2 பேர் இருப்பது தெரியவந்தது. 2 பேரையும் பஸ்சை விட்டு இறக்கி போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள், மதுரை மாவட்டம் கருமத்தம்பட்டி கிராமத்தைச்சேர்ந்த ஜெயராஜ்(வயது 44), உசிலம்பட்டியைச்சேர்ந்த ராஜ்குமார்(25) என்பதும், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 12 கிலோ எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் சொகுசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த ஜெயராஜ், ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story