சாலையை அகலப்படுத்தும் பணிக்கு வனத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


சாலையை அகலப்படுத்தும் பணிக்கு வனத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Aug 2018 4:15 AM IST (Updated: 15 Aug 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே சாலையை அகலப்படுத்தும் பணிக்கு வனத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சாலைப்பணி ஒப்பந்த தாரர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே மச்சுவாடியில் இருந்து அண்டக்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள வனப்பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நேற்று தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அதிகாரி ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள், தங்களிடம் முறையாக அனுமதி பெறாமல், சாலையை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுவதாகக்கூறி சாலையை அகலப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் வனத்துறை அதிகாரிகளுக்கும், சாலையை அகலப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் அண்டக்குளம் சாலையில் பொக்லைன் எந்திரத்தை சாலையின் நடுவில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் ஒப்பந்ததாரர்கள் இது குறித்து கலெக்டர் கணேசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் கணேஷ் வனத்துறை அதிகாரிகளிடம் சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனக்கூறியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சாலையை அகலப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story