கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Aug 2018 4:00 AM IST (Updated: 15 Aug 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கண்கொடுத்தவணிதத்தில் மகாகாளிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்

குருக்களாக சாமிநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாமிநாதன் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றார். அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை திருடி சென்று விட்டனர். காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் உண்டியல் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஏராளமான மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகக்குழு தலைவர் அமிர்தலிங்கம் கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவள்ளி மற்றும் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவில் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், மகாகாளி அம்மன் கோவில் உண்டியல் கிடப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் ஊர் மக்கள் பள்ளிக்கு சென்று பார்த்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்து. உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு உண்டியலை மட்டும் அங்கேயே போட்டு சென்றது தெரியவந்தது.

இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது கோவில் அருகே உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் அந்த வழியாக ஒரு காரும், ஒரு ஆட்டோவும் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனால் மர்ம மனிதர்கள் காரில் வந்து கோவிலில் இருந்த உண்டியலை திருடி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் உண்டியலை திருடி சென்ற சம்பவம் கொரடாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story