வைகை அணையில் இருந்து ராமநாதபுரத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும், கலெக்டரிடம் விவசாயிகள் மனு


வைகை அணையில் இருந்து ராமநாதபுரத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும், கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 14 Aug 2018 10:00 PM GMT (Updated: 14 Aug 2018 8:23 PM GMT)

வைகை அணையில் இருந்து ராமநாதபுரத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமானோர் மனு அளித்தனர். கடலாடி யூனியன் கீரந்தை கிராமத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து காவிரி குடிநீர் வழங்கக்கோரி மனு கொடுத்தனர். கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக குடிநீரை ஒரு குடம் ரூ.5 விலை கொடுத்து வாங்குவதாகவும், மற்ற தேவைகளுக்கு ஒரு டேங்கர் தண்ணீரை ரூ.1000க்கு வாங்கி பயன்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

பரமக்குடி இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர் செயலாளர் பெருமாள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– பரமக்குடி நகரிலும், சுற்றிலும் உள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது வைகை அணையில் போதிய நீர்மட்டம் உள்ளதால் நிலத்தடி நீர்மட்டத்தை காப்பாற்ற ராமநாதபுரத்துக்கு வைகை தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதுரை வீரன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– குடிநீர் தேவைக்காக உடனடியாக வைகை அணையில் இருந்து ராமநாதபுரத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். சூடியூர் பகுதியில் புதிய மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது. கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வைகையின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களில் வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கீழக்கரை அருகே உள்ள வண்ணாங்குண்டு பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் அளித்த மனுவில், வண்ணாங்குண்டு முனியசாமி நகரில் குடியிருப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். நயினார்கோவில் யூனியன் அ.காச்சான் கிராம பொதுமக்கள் சார்பில் அளித்துள்ள மனுவில் அ.காச்சான் கிராம பகுதியில் அடிக்கடி வழிப்பறி, கொள்ளை, தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில், ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலையம் அருகே சுமார் 40 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இங்கு பணிபுரியும் போக்குவரத்து கழக ஊழியர் ஆட்டோ ஓட்டுனர்களை தொழில் செய்ய விடாமல் தடுத்து வருகிறார். மேலும் பொய்யான தகவல்களை கொடுத்து பாதிப்புக்குள்ளாக்குகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல நயினார்கோவில் அருகே மூவலூர் கிராம மக்கள் அளித்த மனுவில் பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூட்டை உடைத்து 3 பவுன் சங்கிலி, மற்றும் 15,000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அதன் பின்பும் அங்கு கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி உள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாசலம் சார்பில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில், கிராம சபை கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும். அதில் வரவு செலவு அறிக்கை, தணிக்கை அறிக்கை, திட்ட அறிக்கை போன்ற அனைத்து ஆவணங்களையும் மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். கிராம சபை கூட்டத்தை வீடியே எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். கிராம நலன் கருதி மக்கள் வைக்கும் தீர்மானங்களை அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story