அம்மாபேட்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி பொக்லைன் எந்திர டிரைவர் தற்கொலை மிரட்டல்


அம்மாபேட்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி பொக்லைன் எந்திர டிரைவர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:00 AM IST (Updated: 15 Aug 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பொக்லைன் எந்திர டிரைவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை சின்னக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுடைய மகன் ஸ்ரீரங்கன் (வயது 38). இவருடைய மனைவி இந்துமதி (23). ஸ்ரீரங்கன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பவானியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் கடனில் பொக்லைன் எந்திரம் வாங்கி உள்ளார். மேலும் அவர் பொக்லைன் எந்திரத்தை ஓட்டு வந்து உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பொக்லைன் எந்திரத்துக்காக வாங்கிய கடனை ஸ்ரீரங்கன், நிதிநிறுவனத்தில் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை நிதிநிறுவன ஊழியர்கள் சிங்கம்பேட்டை சின்னக்காட்டூரில் உள்ள ஸ்ரீரங்கன் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் ஸ்ரீரங்கனின் தாய் பழனியம்மாள் மட்டும் இருந்து உள்ளார். மற்றவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர்.

இதில் நிதி நிறுவன ஊழியர்கள், பழனியம்மாளிடம் ஸ்ரீரங்கன் எங்கே சென்று உள்ளார் என்று கேட்டு உள்ளனர். அதற்கு அவர், வெளியே சென்றுவிட்டார் என்று கூறினார். இதைத்தொடர்ந்து நிதி நிறுவன ஊழியர்கள், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த பொக்லைன் எந்திரத்தை அங்கிருந்து கொண்டு சென்றுவிட்டனர். மதியம் 12 மணி அளவில் ஸ்ரீரங்கன் வீட்டுக்கு வந்து உள்ளார்.

அப்போது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த பொக்லைன் எந்திரத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் தாய் பழனியம்மாளிடம் இதுகுறித்து கேட்டு உள்ளார். அப்போது நிதி நிறுவன ஊழியர்கள் வாங்கி கடனை செலுத்தாததால் பொக்லைன் எந்திரத்தை ஓட்டிச்சென்றுவிட்டதாக கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கன் மோட்டார்சைக்கிளில் பவானியில் உள்ள நிதி நிறுவனத்துக்கு சென்றார். பூதப்பாடி அருகே சென்றபோது, தன்னுடைய பொக்லைன் எந்திரத்தை நிதி நிறுவன ஊழியர்கள் ஓட்டிச்சென்றதை அவர் கண்டார். இதைத்தொடர்ந்து அவர் பொக்லைன் எந்திரத்தை தடுத்து நிறுத்தினார். பின்னர் ஸ்ரீரங்கன் நிதிநிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பொக்லைன் எந்திரத்தை அங்கிருந்து வீட்டுக்கு ஓட்டிச்சென்றுவிட்டார்.

இதுகுறித்து நிதி நிறுவன ஊழியர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர். இந்தநிலையில் ஸ்ரீரங்கன் சின்னக்காட்டூர் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் மதியம் 1.30 மணி அளவில் ஏறினார். பின்னர் மேலே நின்றுகொண்டு நிதிநிறுவன ஊழியர்கள் கடனை கேட்டு என்னுடைய பொக்லைன் எந்திரத்தை எடுத்துச்சென்றுள்ளனர். மேலும் கடனை கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார்கள் என்று கூறி கோபுரத்தில் இருந்து குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஸ்ரீரங்கனின் உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. மதியம் 2.30 மணி அளவில் ஸ்ரீரங்கன் மயங்கி கோபுரத்தில் அமர்ந்துவிட்டார்.

உடனடியாக இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஸ்ரீரங்கனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை 4 மணி அளவில் ஸ்ரீரங்கனை தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து அவரை பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தனர். அங்கு ஸ்ரீரங்கனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

செல்போன் கோபுரத்தில் பொக்லைன் எந்திர டிரைவர் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story