ஆழியார் அணை காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5–வது நாளாக தடை


ஆழியார் அணை காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5–வது நாளாக தடை
x
தினத்தந்தி 15 Aug 2018 4:15 AM IST (Updated: 15 Aug 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் அட்டகட்டி வனப்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் 9–வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அமைந்துள்ள ஆழியார்அணை காட்சி முனைக்கு செல்வதற்கு சுற்றுலாபயணிகளுக்கு 5–வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை,

வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாபயணிகள் வால்பாறை நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு அருகில் உள்ள பல்வேறு இடங்களில் இருக்கும் சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்கின்றனர். இது தவிர பொள்ளாச்சி பகுதியிலிருந்து வரும் போது ஆழியார் வனத்துறை சோதனை சாவடியிலிருந்து மலைப்பாதை செல்லும் அதிகளவில் சுற்றுலாபயணிகள் செல்லக்கூடிய ஒரே இடம் மலைப்பாதையில் அமைந்துள்ள 9–வது கொண்டை ஊசிவளைவு பகுதியாகும். இந்த 9–வது கொண்டைஊசி வளைவு பகுதியில் ஆழியார் அணையின் காட்சி முனை அமைந்துள்ளது. இந்த காட்சிமுனை பகுதியிலிருந்து பார்க்கும் போது ஆழியார் அணை மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் அமைந்துள்ள பசுமையான வயல் வெளிகளும் இயற்கை காட்சிகளும், குடியிருப்பு பகுதிகளும் நன்றாக தெரியும்.

மேலும் இந்த இடத்தில் அதிகளவில் வரையாடுகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் இந்த 9–வது கொண்டை ஊசிவளைவு பகுதியில் வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணிகள் அதிகளவில் செல்வார்கள். இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக ஆழியார் வனத்துறை சோதனை சாவடிக்கு மேல் பகுதியிலிருந்து அட்டகட்டி 16–வது கொண்டை ஊசி வளைவு வரை உள்ள வனப்பகுதிகளில் அதிகளவில் பலத்த காற்று வீசிவருகிறது. இதனால் 9–வது கொண்டை ஊசிவளைவு பகுதியில் அமைந்துள்ள ஆழியார் காட்சிமுனை பகுதியிலும் பலத்த காற்று வீசுவதால் காட்சி முனைப் பகுதியில் நின்று பார்ப்பவர்களை காற்று தள்ளுகிறது. இதனால் புகைப்படம் மற்றும் செல்போனில் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் காட்சிமுனையின் நுனிப் பகுதிக்கு சுற்றுலாபயணிகள் செல்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வனஅலுவலர் மாரிமுத்து உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி 9–வது கொண்டை வளைவு காட்சிமுனைக்கு சுறுறுலாபயணிகளுக்கு செல்வதற்கு 5–வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு செல்லும்பாதையை முட்செடிகளை கொண்டு மூடி வேட்டைத்தடுப்பு காவலர்களை அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். ஆடி மாதத்தில் பலத்த காற்று வீசக்கூடிய காலம் என்பதால் சுற்றுலாபயணிகளின் பாதுகாப்பு நலன்கருதி இந்த நடவடிக்கையை வனத்துறை எடுத்துள்ளதாகவும், இதையும் மீறி இரவு நேரங்களிலும், பகல் நேரத்திலும் மறைக்கப்பட்டுள்ள முட்செடிகளை தாண்டி யாராவது சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தெரிவித்தார்.


Next Story