குமரி மாவட்டத்தில் கனமழை: குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது


குமரி மாவட்டத்தில் கனமழை: குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 16 Aug 2018 4:45 AM IST (Updated: 16 Aug 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

குழித்துறை,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவானது உயர்த்தப்பட்டது

நேற்று முன்தினம் மாலையில் 12 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய கனமழை நேற்று காலை வரை அதாவது விடிய விடிய மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்தது. இதுதவிர அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பெருஞ்சாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவானது 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் உபரிநீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஏற்கனவே குற்றியாணி என்ற இடத்தில் உபரிநீர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் மழைவெள்ளம் ரப்பர் தோட்டத்தின் வழியாக பரளியாற்றில் கலந்தது. இதனால் பரளியாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெருஞ்சாணி- பொன்மனை இடையே உள்ள சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுதவிர மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, கருங்கல், திருவட்டார், அருமனை, குலசேகரம் போன்ற பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மழையுடன் பல இடங்களில் பலத்த காற்றும் வீசியது. இதில் ரப்பர், வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

மார்த்தாண்டம்-கருங்கல் சாலையில் விரிகோட்டில் உள்ள உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலகம் அருகில் நின்ற தென்னை மரம் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன.

குழித்துறை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் கரையோர பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி, ஞாறான்விளை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மார்த்தாண்டம் மேம்பால பணிகள் நடைபெறுவதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் வாகனங்கள் ஞாறான்விளை, கழுவன்திட்டை வழியாக சென்று வந்தன. இந்த பகுதியில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. எனவே, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற வாகனங்கள் திருவட்டார் சென்று தேமானூர், அருமனை வழியாக இயக்கப்பட்டன. குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி திடலில் நேற்று முன்தினம் நள்ளிரவு வெள்ளம் புகுந்தது. இதனால், வாவுபலி பொருட்காட்சி மூடப்பட்டது. அங்கு இருந்த ராட்டினங்கள், கடைகளை மழைவெள்ளம் சூழ்ந்தது.

வெட்டுமணியில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் சாலையில் சென்னித்தோட்டம் பகுதியில் வெள்ளம் புகுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. நல்லூர் தென்னப்பற்றிவிளையில் மழைநீர் புகுந்ததில் ஜெயக்குமார், செல்வராஜ், பால்ராஜ் உள்பட பலரது வீடுகள் சேதமடைந்தன. அருமனை பகுதியில் பெய்த கனமழையால் தோட்டவரம்புவிளை பகுதியை சேர்ந்த சாந்தகுமாரி, சாந்தி ஆகியோரது வீடுகள் இடிந்தன.

மார்த்தாண்டம் நேசமணி பாலம் அருகே குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதில் ஆற்றுநீர் புகுந்ததால் சுத்திகரிப்பு நிலையம் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியது.

கீரிப்பாறை மற்றும் மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தால் லேபர் காலனிக்கு செல்லும் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதையடுத்து அங்கு குடியிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அரசு ரப்பர் தோட்டத்தில் பாதுகாப்பான கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளை தோவாளை தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். தெரிசனங்கோப்பு-அருமநல்லூர் சாலையில் தரைப்பாலம் மூழ்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

காளிகேசத்தில் உள்ள காட்டாற்றின் மறுகரையில் காளி கோவில் உள்ளது. இங்கு முக்கிய நாட்களில் ஆற்றை கடந்து சென்று பக்தர்கள் வழிபாடு நடத்துவார்கள். அதன்படி, ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று முன்தினம் ஆண்கள், பெண்கள் என 20 பேர் காளி கோவிலுக்கு சென்றனர்.

அவர்கள் வழிபாடு முடிந்து திரும்பிய போது, காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அவர்களால் திரும்ப வர முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கோவிலில் தஞ்சம் புகுந்தனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் கோவிலில் தங்கினர். நேற்று காலையில் அரசு ரப்பர் கழக ஊழியர்கள் ரப்பர் படகு மூலம் பக்தர்களை மீட்டனர்.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏழுதேசம் பேரூராட்சி மற்றும் வாவறை, முன்சிறை, மங்காடு போன்ற ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக மங்காடு, ஆலவிளை, மாமுகம், கோயிக்கல்தோப்பு, அம்பி, பள்ளிக்கல், ஏழூர்முக்கு, பருத்திகடவு, வைக்கல்லூரி, கலிங்கராஜபுரம், இஞ்சிபுரம், ஆயிரம்பள்ளி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதியில் உள்ள சுமார் 750-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நேற்று காலையில் தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். சிலர் தங்களது வீடுகளின் மாடியில் அமர்ந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல வெள்ளத்தின் அளவு கூடிக்கொண்டே இருந்தது. இதனால், தீயணைப்பு படையினரும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வீடுகளில் இருந்தவர்களை படகு மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

இதற்காக பள்ளிக்கல் தேவர்விளை அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் பல இடங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. மங்காடு பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

பணமுகம்-மங்காடு, கணபதியான்கடவு - பார்த்திபபுரம் போன்ற வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பருத்திக்கடவு பகுதியில் ஒரு கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். வீணாக கடலில் கலந்த மழை வெள்ளத்தில் சிக்கி தேங்காப்பட்டணத்தில் ஒரு படகு முற்றிலும் சேதமடைந்தது. திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு 6-வது நாளாக தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

Next Story