கூடலூரில் தொடர் கனமழை: ஆதிவாசி கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது


கூடலூரில் தொடர் கனமழை: ஆதிவாசி கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 16 Aug 2018 3:45 AM IST (Updated: 16 Aug 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் பெய்து வரும் தொடர் கனமழையால், ஆதிவாசி கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையொட்டி கூடலூர்– ஊட்டி சாலை மற்றும் கேரள மலைப்பாதைகளில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் மரங்களும் சாய்வதால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூரில் 82 மில்லி மீட்டரும், தேவாலாவில் 128 மில்லி மீட்டரும் மழை பெய்தது. இரவு 9 மணியளவில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புத்தூர்வயல் அருகே தேன்வயலில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்ந்து பெய்த கன மழையால் திடீரென வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தேன்வயல் ஆதிவாசி கிராமத்துக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ஆதிவாசி மக்களை வீடுகளில் இருந்து விட்டு வெளியேற்றி, தற்காலிக நிவாரண முகாமாக புத்தூர்வயல் அரசு பள்ளியில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். முன்னதாக வீடுகளை விட்டு வெளியேற மக்கள் மறுத்தனர். மழை வெள்ளம் அதிகளவில் வர தொடங்கியதால், அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று வீடுகளில் இருந்து வெளியேறி அரசு பள்ளியில் தஞ்சம் புகுந்தனர். அதில் 65 ஆதிவாசி மக்கள் தங்கி உள்ளனர். மேலும் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கின.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் மழை வெள்ளம் படிப்படியாக வடிய தொடங்கியது. இருப்பினும் ஆதிவாசி மக்கள் நிவாரண முகாமிலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் உணவு வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில் அந்த மக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் ஆதிவாசி மக்களின் வீடுகள் சேதம் அடைந்து, தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று தொரப்பள்ளி அருகே இருவயல் ஆதிவாசி கிராமத்துக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. அங்கு வசித்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தொரப்பள்ளி அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

 இதுகுறித்து தேன்வயல் ஊர் தலைவர் மாணிக்கம் கூறியதாவது:–

ஆண்டுதோறும் கனமழையின்போது எங்கள் கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. எனவே மாற்றிடம் வழங்க வேண்டும் என வருவாய்த்துறைக்கு கோரிக்கை விடுத்தோம். மாக்கமூலா வனப்பகுதியில் இடம் ஒதுக்குவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் இங்கிருந்து நீண்ட தொலைவில் அந்த இடம் உள்ளதால், அங்கு செல்ல எங்கள் மக்கள் மறுத்துவிட்டனர். புத்தூர்வயலில் இருந்து தொரப்பள்ளிக்கு செல்லும் வழியில் 2 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அதை எங்களுக்கு ஒதுக்கி தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும். பகலில் வெள்ளம் வந்தால் தப்பிவிடலாம். ஆனால் இரவில் வெள்ளம் வந்தால், குழந்தைகளுடன் நாங்கள் எப்படி தப்புவோம் என்பது தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story