மஞ்சூர்– கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு
மஞ்சூரில் இருந்து கோவைக்கு செல்லும் பிரதான சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.
மஞ்சூர்,
நீலகிரியில் இருந்து கோவைக்கு செல்ல, 3–வது மாற்றுப்பாதையாக மஞ்சூர் வழியாக ஒரு முக்கிய சாலை உள்ளது. இது மஞ்சூரில் இருந்து கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு செல்லும் பிரதான சாலை. இந்த சாலையோரங்களில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இதனால் அவ்வப்போது காட்டுயானை, காட்டெருமைகள் சாலையில் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருவது, வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த சாலை வழியாக கீழ்குந்தாவில் இருந்து கோவைக்கு அரசு பஸ் சென்றது. பெரும்பள்ளம் அருகே ஒரு காட்டுயானை சாலையின் குறுக்கே நின்றவாறு அரசு பஸ்சை வழிமறித்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் 1 மணி நேரத்திற்கு பிறகு, சாலையை விட்டு காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அந்த வழியே மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது.
Related Tags :
Next Story