விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு
தாம்பரம்–நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று விருதுநகர் ரெயில்நிலையத்தோடு நிறுத்தப்பட்டதால் நெல்லை வரை பயணச்சீட்டு பெற்ற பயணிகள் பரிதவிப்புக்குள்ளாயினர்.
தாம்பரம்–நெல்லை வரை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நள்ளிரவு தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் நேற்று மதியம் விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. கோவில்பட்டி– மணியாச்சி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விருதுநகர்– நெல்லை இடையே இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாலை விருதுநகரில் இருந்து தாம்பரத்திற்கு இந்த ரெயில் புறப்பட்டுச் செல்லும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அந்த ரெயிலில் பலருக்கும் நெல்லைவரை டிக்கெட் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி ஏற்கனவே ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது பயணிகள் விருதுநகர்–நெல்லை இடையே இந்த ரெயில் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தால் நேற்று தாம்பரத்திலிருந்து நெல்லைவரைக்கும் எங்களுக்கு பயணச்சீட்டு வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினர். குறைந்தபட்சம் இந்த ரெயில் மதுரை வந்த உடனாவது மதுரை ரெயில் நிலையத்தில் இதுபற்றிய அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் நாங்கள் மாற்று ஏற்பாடு ஏதாவது செய்து நெல்லை சென்றிருப்போம் என்று தெரிவித்தனர்.
பல பயணிகள் வேறு ரெயில் மூலமாகவோ பஸ் மூலமாகவோ நெல்லை செல்வதற்கு தங்களிடம் பணம் இல்லை என பரிதவிப்புடன் கூறினர். விருதுநகர்– நெல்லை இடையேயான கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் திருப்பி தரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திய போது அதற்கு உடனடி வாய்ப்பில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட ரெயில்நிலையங்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்தை ரத்து செய்திருந்தால் அந்த ரெயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதிகளுக்கு பயணச்சீட்டு வழங்கியிருக்கக்கூடாது. பயணச்சீட்டு வழங்கும் இடத்திலேயே இது பற்றி தெரிவித்திருக்க வேண்டும். நிர்வாகத்தின் குறைபாட்டால் பயணிகளை பரிதவிக்க விடுவது ஏற்புடையதல்ல. இனியாவது இம்மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதை ரெயில்வே நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.