அந்தியூர் அருகே 2 குடிசை வீடுகளில் தீ விபத்து சரக்கு ஆட்டோ, பொருட்கள் எரிந்து நாசம்


அந்தியூர் அருகே 2 குடிசை வீடுகளில் தீ விபத்து சரக்கு ஆட்டோ, பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 16 Aug 2018 3:30 AM IST (Updated: 16 Aug 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே 2 குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பொருட்கள் மற்றும் சரக்கு ஆட்டோ எரிந்து நாசம் ஆனது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே பட்லூர் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). பந்தல் போடும் தொழிலாளி. இவருடைய மனைவி தெய்வானை. இவருடைய மகன் சக்திவேல். மனைவி பிந்து. இவர்கள் 4 பேரும் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை கிருஷ்ணன் வெளியே சென்றுவிட்டார். மற்ற 3 பேரும் வீட்டில் இருந்தனர். தெய்வானை வீட்டின் வெளியே சென்று சமையல் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது குடிசை வீட்டில் இருந்து புகை வந்தது. இதனை கவனித்த தெய்வானை, வீட்டிற்குள் இருந்து சக்திவேல், பிந்து ஆகியோரை உடனடியாக வெளியே வாருங்கள் என்று சத்தம் போட்டார். இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் இருந்த 2 பேரும் வெளியே வந்துவிட்டனர். சிறிதுநேரத்தில் குடிசை வீடு தீப்பிடித்து மளமளவென எரிந்தது. மேலும் அந்த வீட்டின் அருகே இருந்த மற்றொரு குடிசை வீடு மற்றும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவுக்கும் பரவி தீப்பிடித்து எரிந்தது.

இதனை கவனித்த பொதுமக்கள் குடிசை வீடுகளிலும் மற்றும் சரக்கு ஆட்டோவிலும் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து குடிசைகளில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, மாலை 4 மணி அளவில் முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது.

எனினும் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்தததோடு, வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்டு பொருட்கள் எரிந்தது. மேலும், சரக்கு ஆட்டோவும் இந்த தீ விபத்தில் எரிந்து நாசம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story