வியாபாரி வீட்டில் 70 பவுன் நகை-ரூ.10 லட்சம் கொள்ளை
திண்டுக்கல்லில், வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 70 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திண்டுக்கல்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டுக்கல் கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 55). இவருடைய மகன் விக்டர் ஜோசப். இருவரும் சேர்ந்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர். விக்டர் ஜோசப்பின் மனைவி ஜூலி வினிதா. இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள சங்கராபுரத்தில் கிறிஸ்தவ ஆலய திருவிழா நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு அருளானந்தம் குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து இரவு 10 மணி அளவில் அருளானந்தம் மட்டும் வீட்டுக்கு திரும்பியுள்ளார். ஆனால் மகனிடம் இருந்த வீட்டு சாவியை வாங்காமல் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் சங்கராபுரத்துக்கு சென்று விக்டர் ஜோசப்பிடம் இருந்து சாவியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த துணி மணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் அதில் இருந்த 70 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ஆகியவை கொள்ளை போயிருந்தது. பின்னர் இதுகுறித்து அருளானந்தம், திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வியாபாரியின் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story