கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு
x
தினத்தந்தி 16 Aug 2018 5:00 AM IST (Updated: 16 Aug 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

தொடர் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மண்டியா, குடகு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது.

பருவமழை தொடங்கிய முதல் நாளே, கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மங்களூரு நகரத்தில் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தில் சூழ்ந்துகொண்டன. மேலும், மலை நாடு என அழைக்கப்படும் குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

அதுபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகள் இரு முறை நிரம்பின. மேலும் பல அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அதன் பிறகு நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் பாதுகாப்பை கருதி, வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நஞ்சன்கூடு, மண்டியா மாவட்டங் களில் ஏராளமான பகுதிகள் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து திடீரென்று அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழமையான வெல்லஸ்லி பாலத்தை தொட்டப்படி தண்ணீர் சென்றது. ஆனால் நேற்று காலை கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 121.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 99,896 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 1.05 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,278.02 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து 23 மதகுகள் வழியாக வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஸ்ரீரங்கப்பட்டணாவில் கே.ஆர்.எஸ். அணையின் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழமையான வெல்லஸ்லி பாலத்தை மூழ்கியபடி தண்ணீர் சென்றது. இதனால், கே.ஆர்.எஸ். அணைக்கு செல்ல போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், அணையின் முன்பு அமைந்துள்ள பிருந்தாவன் பூங்காவிலும் தண்ணீர் புகுந்தது. அந்தப்பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால், கே.ஆர்.எஸ். அணைப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் திறக்கப்படும் தண்ணீர் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள பச்சிமா வாகிணி, சாய்பாபா ஆசிரமம் ஆகிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. நிமிஷாம்பா கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. பலமுறி தடுப்பணையையும் தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மண்டியா மாவட்ட கலெக்டர் மஞ்சுஸ்ரீ, அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மீட்பு பணிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல, கபிலா ஆற்றிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், நஞ்சன்கூடு, சுத்தூர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது. மேலும் வயல்வெளிகளிலும் வெள்ள நீர் புகுந்தது. அத்துடன் நஞ்சன்கூடு அருகே மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நஞ்சன்கூடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கபிலா கரையோரத்தில் உள்ள வீடுகள், கோவில்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இதேபோல, கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பியிலும் நேற்று தொடர்ந்து கனமழை பெய்தது. கனமழையால் சுள்ளியாவில் இருந்து மடிகேரி செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நேற்றும் என 2-வது நாளாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் 49 கர்நாடக அரசு பஸ்களில் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் நேத்ராவதி, குமாரதாரா, நந்தினி, பல்குனி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. நேற்று தட்சிண கன்னடா மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தது.

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் பெய்த மழைக்கு இடூர் பகுதியை சேர்ந்த ரகுராம் ஷெட்டி(வயது 49) என்பவரும், சித்தாப்புரா பகுதியை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியரான சங்கர் பூஜாரி(58) ஆகியோரும் கால்வாய் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, குடகு மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை கொட்டியது. குறிப்பாக, மடிகேரி, நாபொக்லு, பெட்டதகாடு, பாகமண்டலா, கரடிகாடு, காவிரி ஆற்றின் பிறப்பிடமான தலைக்காவிரி ஆகிய பகுதிகளில் விடிய, விடிய இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால், அந்தப்பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. பாகமண்டலா பகுதியில் சாலையே தெரியாத அளவுக்கு மழை வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால், தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். பல்வேறு பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி கிடந்தது.

மேலும் மங்களூரு-மடிகேரி சாலையில் உள்ள ஸ்ரீமங்களா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால், நேற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

மேலும், ஹாசன் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக சக்லேஷ்புராவில் தான் அதிகமாக மழை கொட்டி வருகிறது. இதனால் எடகுமரி பகுதியில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் பெங்களூரு-மங்களூரு இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிராடி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவமொக்கா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கடல் மட்டத்தில் இருந்து 1,819 அடி கொள்ளளவு கொண்ட லிங்கனமக்கி அணையில் தற்போது 1,815 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது.

லிங்கனமக்கி அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால், உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல பத்ராவதியிலும் பலத்த மழை கொட்டியது. பத்ராவதி நகரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பெட்ரோல், டீசல் கசிவு ஏற்படாமல் இருக்க தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, நுரை பொங்கிய தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தட்சிண கன்னடா, உடுப்பி, குடகு, சிவமொக்கா, மண்டியா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் மண்டியா, குடகு மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அந்தப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு பிறகு ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 830 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் 4 கிளைகள் உள்ளன. தற்போது கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால், லிங்கனமக்கி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் அந்த அணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால், ஜோக் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த மே மாதத்திற்கு முன்பு வரை சரியாக மழை பெய்யாததால், ஜோக் நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி காய்ந்து கிடந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது, கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஜோக் நீர்வீழ்ச்சியில் தற்போது தான் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Next Story