திருமானூர் கொள்ளிடம் ஆற்று பாலத்தில் பழுது சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


திருமானூர் கொள்ளிடம் ஆற்று பாலத்தில் பழுது சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2018 4:15 AM IST (Updated: 17 Aug 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள திருமானூர் கொள்ளிடம் ஆற்று பாலத்தில் பழுதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமானூர்,

பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. இதில் 1.3 கி.மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தை தாங்கி நிற்க 24 தூண்கள் உள்ளன. இதில் இரண்டு தூண்களுக்கும் நடுவில் இணைக்கும் வகையில் ரப்பர் பொருத்தப்பட்டது. தஞ்சை மாவட்டதை இணைக்கும் முக்கிய பாலமான இது, நாளடைவில் பழுதானதால் ரப்பர் டியூப்புகள் மாற்றப்பட்டு இரும்பு ராடுகள் பொருத்தப்பட்டன. பல லட்சம் செலவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் பழுது நீக்கப்பட்டது. ஆனால், பழுது நீக்கப்பட்ட 2 ஆண்டுகளில் பல முறை அந்த இரும்பு ராடுகள் பெயர்ந்து பாலத்தில் தொடர் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. பின்னர் அவை பல லட்சம் செலவு செய்து சரிசெய்வதும், பெயர்ந்து போவதுமாக தற்போது வரை உள்ளது.

இரும்பு தகடுகள் உடைவதோடு இல்லாமல் பாலத்தின் மேல் பகுதியில் பெரிய பள்ளங்களையும் உண்டாக்கி விடுகின்றன. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவ்வபோது பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து செல்கின்றன. இந்நிலையில், அவ்வழியே சென்ற பொதுமக்கள் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களின் அருகே கிடந்த தடுப்புகளை எடுத்து தடுப்புகள் வைத்துள்ளனர். மேலும், பெயர்ந்து கிடந்த இரும்பு ராடுகளை அதன் மீது தூக்கி வைத்துள்ளனர். எனவே பாலத்தில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story