பழைய கட்டளை கால்வாய் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் போராட்டம்


பழைய கட்டளை கால்வாய் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:30 AM IST (Updated: 17 Aug 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

பழைய கட்டளை கால்வாயின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் அதன் அனைத்து கிளை கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. பழைய கட்டளை கால்வாயில் வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தண்ணீர் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தாயனூர், பள்ளக்காடு, எட்டரை, கோப்பு போன்ற கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் நேற்று திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்த முற்றுகை போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சார்பற்றது) சின்னத்துரை தலைமை தாங்கினார். சமூக நீதி பேரவை மாவட்ட செயலாளர் ரவிக்குமார், மக்கள் நல பாதுகாப்பு மைய தலைவர் ஜார்ஜ் உள்பட ஏராளமான விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தின் வாசல் படியில் உட்கார்ந்து கோஷம் போட்டனர்.

போராட்டம் தொடர்பாக சின்னத்துரை நிருபர்களிடம் கூறியதாவது:-

பழைய கட்டளை கால்வாயின் கடைமடை பகுதிக்கு இதுவரை தண்ணீர் வராமல் இருப்பதற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கு தான் காரணம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தூர்வாரி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. திருச்சி மாவட்டத்தில் ஆறு, குளங்கள், ஏரிகள், பாசன கால்வாய்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து கிடக்கிறது. காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் இதுவரை சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் போய் கலந்து இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட காவிரி- குண்டாறு-வைகை அணை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உய்ய கொண்டான் வாய்க்காலை ரூ.11½ கோடியில் தூர்வாரியதில் முறைகேடு நடந்து உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து ஆற்றுப்பாதுகாப்பு உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கட்டளை கால்வாய் கடை மடை பகுதியில் உள்ள வரத்து வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுப்பதாக அளிக்கப்பட்ட உறுதியை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். 

Next Story