மழைநீர் தேங்குவதால் கிருஷ்ணா நதி கால்வாய் பாலம் இடிந்து விழும் அபாயம்
மழைநீர் தேங்குவதால் கிருஷ்ணா நதி கால்வாய் பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா குடிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படி சேமித்து வைக்கும் தண்ணீரை தேவைப்படும் போது பூண்டியில் இருந்து லிங்க் மற்றும் பேபி கால்வாய்கள் மூலம் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறக்கப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தம் 1983-ம் ஆண்டு செய்யப்பட்டது.
சிறு பாலங்கள்
இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இதில் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர், தமிழகத்தில் 25 கிலோமீட்டர் தூரம் வரை கால்வாய் உள்ளது.
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி இடையேயான தூரம் 25 கிலோ மீட்டர். இந்த 25 கிலோமீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா நதி கால்வாய் மீது 89 பகுதிகளில் அந்தந்த பகுதி மக்கள் கடந்து செல்வதற்காக சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இடிந்து விழும் அபாயம்
இந்த பாலங்கள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி பகுதியில் உள்ள பாலத்தில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அவ்வப்போது பெய்து வரும் மழை நீர் தேங்குகிறது. இதனால் பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகள் துரு பிடித்து இடிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story