வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம்
வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே அவரை கொலை செய்து உடலை ஆற்றில் வீசியது அம்பலமாகி உள்ளது.
ஹாசன்,
வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே அவரை கொலை செய்து உடலை ஆற்றில் வீசியது அம்பலமாகி உள்ளது. இதற்கிடையே போலீசுக்கு பயந்து அந்த பெண்ணின் கள்ளக்காதலன் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கள்ளக்காதல்ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா இரேசாவே அருகே ஒன்னசெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 34). இவர் அதேப்பகுதியை சேர்ந்த பூஜா என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், மஞ்சுநாத்துக்கு சொந்தமான விவசாய நிலத்தை சமப்படுத்துவதற்காக ஜம்பூரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் அபிலாஷ் என்பவரை மஞ்சுநாத் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அபிலாஷ், ஒரு மாதமாக மஞ்சுநாத் வீட்டில் தங்கி, விவசாய நிலத்தை சமப்படுத்தி கொடுத்தார். அப்போது, அபிலாசுக்கும், பூஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.
கொலை செய்ய திட்டம்மஞ்சுநாத்தின் வீட்டில் இருந்து அபிலாஷ் சென்ற பின்னரும், இருவரும் செல்போன் மூலம் தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். மஞ்சுநாத் வீட்டில் இல்லாத நேரத்தில், அபிலாஷ் அங்கு சென்று பூஜாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் மஞ்சுநாத்துக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பூஜாவையும், அபிலாசையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் தங்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என தெரிகிறது.
மேலும், மஞ்சுநாத் உயிருடன் இருந்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என எண்ணிய பூஜா, கள்ளக்காதலன் அபிலாசுடன் சேர்ந்து மஞ்சுநாத்தை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.
கழுத்தை இறுக்கி கொலைஅதன்படி கடந்த 8–ந்தேதி மஞ்சுநாத் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பூஜா, தன்னுடைய கள்ளக்காதலன் அபிலாசுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தார். பின்னர் அவர்கள், வீட்டில் இருந்த துண்டை வைத்து மஞ்சுநாத்தை கழுத்தை இறுக்கினர். இதில் மஞ்சுநாத் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள், 2 பேரும் சேர்ந்து மஞ்சுநாத்தின் உடலை சக்லேஷ்புரா பகுதியில் ஓடும் ஹேமாவதி ஆற்றில் வீசிவிட்டனர்.
இந்த நிலையில், மஞ்சுநாத் மாயமாகிவிட்டதாக பூஜா, இரேசாவே போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக இரேசாவே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, பூஜாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் பூஜாவை பிடித்து விசாரித்தனர்.
கள்ளக்காதலன் தற்கொலைஅப்போது பூஜா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் மேலும் சந்தேகமடைந்த போலீசார், பூஜாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது, தங்களின் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் மஞ்சுநாத்தை, கள்ளக்காதலன் அபிலாசுடன் சேர்ந்து கொலை செய்து உடலை ஹேமாவதி ஆற்றில் வீசியதாக பூஜா தெரிவித்தார். இதனால் மஞ்சுநாத் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீசுக்கு பயந்து கடந்த 13–ந்தேதி பெங்களூருவில் வைத்து அபிலாஷ், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பூஜா, மஞ்சுநாத்தின் உடல் வீசப்பட்ட பகுதியை போலீசாருக்கு அடையாளம் காட்டினார். இதனை இரேசாவே போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பூஜாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.