நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இன்று முதல் 2–ந் தேதி வரை அமல்


நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இன்று முதல் 2–ந் தேதி வரை அமல்
x
தினத்தந்தி 19 Aug 2018 3:00 AM IST (Updated: 19 Aug 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 2–ந் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 2–ந் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.

144 தடை உத்தரவு

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா நெற்கட்டும் செவல் மஜரா பச்சேரியில் ஒண்டிவீரன் நினைவு தினம் நாளையும் (திங்கட்கிழமை), பூலித்தேவன் பிறந்தநாள் விழா வருகிற 1–ந் தேதியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் மாநிலத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து 400–க்கும் மேற்பட்ட வாகனங்களில் பல்வேறு அமைப்பினர் வந்து கலந்து கொண்டு, மரியாதை செலுத்த இருக்கிறார்கள்.

இதனால் சட்டம்–ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பேணிக்காக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் வருகிற 2–ந் தேதி காலை 6 மணி வரை நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஊர்வலம் செல்ல தடை

அதன்படி 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக கூடுவது, வாள், கத்தி போன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் ஊர்வலம் செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. அன்னதானம், பால்குடம், முளைப்பாரி போன்ற நிகழ்ச்சிகளுக்கு முறையாக அனுமதி வாங்க வேண்டும். நெற்கட்டும் செவல் கிராம பகுதியில் வழக்கமாக நின்று செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், மாணவ–மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்களை தவிர மற்ற சுற்றுலா வாகனங்கள் நெல்லை மாவட்ட எல்லைக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story