காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரூர் தவுட்டுப்பாளையத்தில் மேலும் 118 பேர் முகாமில் தங்க வைப்பு


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரூர் தவுட்டுப்பாளையத்தில் மேலும் 118 பேர் முகாமில் தங்க வைப்பு
x
தினத்தந்தி 18 Aug 2018 11:00 PM GMT (Updated: 18 Aug 2018 7:08 PM GMT)

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதையொட்டி, தவுட்டுப்பாளையத்தில் 118 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நொய்யல்,

மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் காவிரியில் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கரூர் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளநீர் மாயனூர் கதவணையை நோக்கி செல்கிறது. கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் காவிரி ஆற்று பாலம் அருகே பாதுகாப்புக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளையும் தாண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு 56 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அங்கு வசித்த 157 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அருகேயுள்ள சமுதாயக்கூடம், பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னரும் காவிரியில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால், தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மேலும் சில வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து கொள்ள வாய்ப்பிருந்தது. இதனால் அங்கிருந்த 34 குடும்பத்தை சேர்ந்த 118 பேர் பாதுகாப்பு கருதி சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

நேற்று காலை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உள்ளிட்டோர் முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். அப்போது பாய், போர்வை மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

மேலும் தெருப்பகுதியில் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் உள்ளிட்டவை உற்பத்தியாகாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மின்சார வயர்கள் ஏதும் அறுந்து கிடக்கிறதா? என பார்வையிட்டு சரிசெய்திடுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மண்மங்கலம் தாசில்தார் ருக்மணி, கரூர் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், புன்செய் புகளூர் பேரூர் செயலாளர் சரவணன், காகிதபுரம் பேரூர் செயலாளர் சதாசிவம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதேபோல் கரூர் அமராவதி ஆறும், காவிரி ஆறும் சங்கமிக்கும் இடமான திருமுக்கூடலூர் பகுதியில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறையினர் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வெள்ளம் சூழ்வதற்கு வாய்ப்பாக கருதப்படும் பகுதிகளில் தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நெரூர் தென்பாகம் ரங்கநாதன்பேட்டை பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்ததால் 32 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அச்சமாபுரம் பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் திருமுக்கூடலூரில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அச்சமாபுரம், ரெங்கநாதன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் விளைநிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது பற்றி வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறையினர் அடங்கிய குழுக்கள் அளவீடு செய்து வருகின்றனர். மொத்தம் 155.5 எக்டேர் விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்புக்கு உள்ளானதாக முதல்கட்டமாக தெரிய வந்திருக்கிறது. மண்மங்கலம் வட்டத்தில் ஆற்று வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story