விளாங்குறிச்சி ரோட்டில் ஒர்க்ஷாப்பில் பயங்கர தீவிபத்து; 8 கார்கள் எரிந்து நாசம்


விளாங்குறிச்சி ரோட்டில் ஒர்க்ஷாப்பில் பயங்கர தீவிபத்து; 8 கார்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:15 AM IST (Updated: 19 Aug 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள ஒரு கார் ஒர்க்ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 கார்கள் எரிந்து நாசமானது.

கணபதி,

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் விளாங்குறிச்சி ரோட்டில் சுந்தரசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கார் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இங்கு 6 பேர் வேலை பார்த்து வருகின்றனர். பழுது பார்ப்பதற்காக மொத்தம் 13 கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

நேற்று நண்பகல் 12 மணியளவில் ராஜேஷ், வாடிக்கையாளர் ஒருவருடைய காரை பழுது நீக்கி அவரிடம் ஒப்படைப்பதற்காக சென்றுவிட்டு ஒர்க்ஷாப்புக்கு திரும்பினார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு காரில் தீப்பிடித்து கரும்புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென மற்ற இடங்களுக்கு பரவியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார்.

இதையடுத்து கடை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

ஆனால் ஒர்க்ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 13 கார்களில் 8 கார்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. மீதமுள்ள 5 கார்கள் சிறிதளவு சேதம் அடைந்தன. மேலும் அந்த கட்டிடமும் பலத்த சேதம் அடைந்தது.

இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமி‌ஷனர் லட்சுமி, உதவி கமி‌ஷனர் சுந்தர்ராஜ், பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் எரிந்து நாசமாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்விரோதம் காரணமாக மர்ம ஆசாமிகள் யாரேனும் ஒர்க்ஷாப்புக்கு தீவைத்தனரா? அல்லது மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story