மாயனூர் கதவணையில் வெள்ளத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு


மாயனூர் கதவணையில் வெள்ளத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2018 10:45 PM GMT (Updated: 18 Aug 2018 7:55 PM GMT)

மாயனூர் கதவணையில் வெள்ளத்தால் மீன்பிடிதொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம்,

மாயனூர் கதவணை காவிரி ஆற்றில் மீன் பிடித்து வியாபாரம் செய்யும் 150-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் படகுகள் மூலம் ஆற்றுக்கு சென்று வலை விரித்து ஜிலேபி, கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்களை அதிக அளவில் பிடித்து வந்து அருகில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் விற்பனை செய்வது வழக்கம். ஆற்று மீன் என்பதால் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இந்த மீன்களை வந்து வாங்கி செல்வர். தற்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் படகில் மீன்பிடிக்க முடியாத நிலையில் திருச்சி மீன் மார்க்கெட்டிற்கு சென்று மீன்களை வாங்கி வந்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் மீன்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வேண்டி உள்ளது.

மேலும் ஆற்று மீனையே விரும்பி வாங்க மாயனூருக்கு வருகின்ற பலரும் வெளியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்யும் மீனை வாங்க விருப்பமின்மையாலும், மீன் வியாபாரம் குறைந்து போதிய வருமானம் இல்லாமல் கடந்த ஒரு மாதகாலமாக இப்பகுதி மீனவர்கள் உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் அளிப்பதை போல் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட தங்களுக்கும் தற்போது வெள்ளத்தால் தொழில் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story