குமரி மாவட்டத்தில் “மழை வெள்ள பாதிப்புக்கு அரசிடம் நிதிஉதவி கேட்கப்பட்டுள்ளது” கலெக்டர் தகவல்


குமரி மாவட்டத்தில் “மழை வெள்ள பாதிப்புக்கு அரசிடம் நிதிஉதவி கேட்கப்பட்டுள்ளது” கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:30 AM IST (Updated: 19 Aug 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மழை வெள்ளப்பாதிப்புக்கு அரசிடம் நிதி உதவி கேட்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் 19 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது மழை வெள்ளம் வடிந்து வருகிறது. பல்வேறு இடங்களில் வீடுகளை சூழ்ந்திருந்த வெள்ளம் வடிந்துவிட்டது. தற்போது 2 முகாம்களில் மட்டுமே மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆறுகளில் தண்ணீர் அதிகமாக செல்வதால் மழைநீர் வடிய தாமதம் ஆகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் அனைத்து இடங்களிலும் தேங்கியிருக்கும் தண்ணீர் முழுமையாக வடிந்தோடிவிடும்.

குமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் தற்போது வரை 11 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 56 வீடுகள் பகுதி சேதம் அடைந்துள்ளன. 171 மின்கம்பங்கள் பாதிப்பு அடைந்திருக்கிறது. 23 மரங்கள் சாய்ந்துள்ளன. வெள்ளத்தால் பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. ஆனால் வயல்களில் இன்னும் தண்ணீர் தேங்கி இருப்பதால் சேதம் கணக்கிடப்படவில்லை. எனவே தண்ணீர் முழுமையாக வடிந்த பிறகு பயிர்களின் சேத விவரம் கணக்கிடப்படும். 63 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளன. கடலில் மாயமான 2 மீனவர்களில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. குமரி மாவட்டத்தில் மழை வெள்ளப்பாதிப்புக்கு அரசிடம் நிதி உதவி கேட்கப்பட்டு உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அனைத்து அணைகளும் பாதுகாப்பாக உள்ளன. அணைகளில் எவ்வளவு தண்ணீரை தேக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. எனவே வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் மலைப் பகுதியில் வாழும் மக்கள் வெளியே வர சிரமப்படுகிறார்கள். மோதிர மலையில் வசிக்கும் மக்கள் வெளியே வர வேறு வழியும் உள்ளது.

முறையான அறிவிப்புக்கு பிறகுதான் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் குமரி மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. நிவாரண பொருட்களை பெற்று கேரள மக்களுக்கு அனுப்புவதற்காக கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யலாம்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார். 

Next Story