அவினாசி அருகே 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு கண்டெடுப்பு


அவினாசி அருகே 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 19 Aug 2018 4:15 AM IST (Updated: 19 Aug 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூரில் இயங்கிவரும் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார், பேராசிரியர் ரமேஷ்குமார் மற்றும் பொன்னுசாமி, வேலுசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் அவினாசி அருகே 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது புதிதாக தெலுங்கு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:–

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து புஞ்சை புளியம்பட்டி செல்லும் சாலையில் புளியம்பட்டியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் ஆலத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1,100 ஆண்டுகள் பழமையான அமணீசர் கோவில் என்ற சமணர் கோவில் உள்ளது. பண்டைய கொங்குநாட்டின் வடபரிசார நாட்டில், அக்கால வணிகர்கள் பயன்படுத்திய பெருவழியில், இந்த கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன், மைசூரு பகுதியில் இருந்து வந்த சமண மதத்தினர், இங்கு குடியேறி, ‘வீரசங்காக பெரும்பள்ளி அணியாதழகியார்’ என்ற சமணர் கோவிலை கட்டினர்.

இந்த கோவில் தான் தற்போது அமணீசர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. சமணர்கள் தாங்கள் தங்கிய ஊர்களில் பல பள்ளிகளை ஏற்படுத்தி, வாழ்வியல் நெறிமுறைகளை போதித்தனர். இதற்கு உதாரணமாக, ஆலத்தூர் அருகே விண்ணப்பள்ளி, புங்கம்பள்ளி, பனையம்பள்ளி போன்ற ஊர்கள் மெய்ப்பிக்கின்றன. இன்றும் கொங்கு நாட்டில் பின்பற்றப்படும் பல சடங்குகள் சமண மதத்தை சேர்ந்ததுதான். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில், கி.பி. 10–ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டுகள் மூன்றும், கி.பி. 13 மற்றும் 14–ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ்கல்வெட்டுகள் மூன்றும் உள்ளன.

கி.பி. 10–ம் நூற்றாண்டில், கொங்கு சோழன், ஆலத்தூர் கோவிலுக்கு வரி வருவாய் வழங்கினார். இக்கோவில் 12–ம் நூற்றாண்டில், குலோத்துங்க சோழன் காலத்தில் அவினாசி கோவிலுக்கு, தாரைவார்த்து கொடுக்கப்பட்டது. ஆனால், ஆலத்தூர் ஊர் சபை நிர்வாகிகள், ஆறு நாட்டாரின் சபைக்கு, இப்பிரச்சினையை கொண்டு சென்றனர். ஆறு நாட்டார் சபை தீர்ப்பில், இரு கோவிலுக்கும் வரி வருவாயை பயன்படுத்த, தீர்ப்பு வழங்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.

பழங்கால அரசு நிர்வாகம், அரசாணை, நீதிமன்றம், தீர்ப்பு என பல செய்திகளை, இக்கோவில் தாங்கி நிற்கிறது. தற்போது இந்த கோவிலில் புதிதாக தெலுங்கு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்துள்ளோம். கி.பி.14–ம் நூற்றாண்டை சேர்ந்த 7 வரிகள் கொண்ட இந்த கல்வெட்டில், கஸ்தூரி வெங்கடாசாரி என்பவருக்கு கோவில் திருவிழாவின் போது கொடுக்கப்பட்ட உரிமை பற்றி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள எழுத்துகள் சிதிலமடைந்து இருப்பதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை.

தொன்மை வாய்ந்த இக்கோவில், தற்போது சிதிலம் அடைந்துள்ளது. கருவறை சேதமடைந்து காணப்படுகிறது. முன் மண்டபத்தில், பல இடங்கள் உடைந்துள்ளன. சுற்றிலும் மரங்கள், முட்செடிகள் வளர்ந்துள்ளன. கோவில், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இங்குள்ள குளம், மண்ணால் மூடப்பட்டு, தன் அடையாளத்தை இழந்து நிற்கிறது.

இக்கோவிலின் சிறப்பை அறிந்து, மதிப்பு மிகுந்த கோவில் சிலைகளை காப்பாற்றும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அமணீசர் கோவிலின் பழம்பெருமையை கருதி, இக்கோவிலை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அவினாசி வட்டார மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story