அதிக அளவு தண்ணீர் செல்வதால் வீரசோழனாற்றின் குறுக்கே இருந்த நடைபாலம் அடித்து செல்லப்பட்டது


அதிக அளவு தண்ணீர் செல்வதால் வீரசோழனாற்றின் குறுக்கே இருந்த நடைபாலம் அடித்து செல்லப்பட்டது
x
தினத்தந்தி 19 Aug 2018 4:15 AM IST (Updated: 19 Aug 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே அதிக அளவு தண்ணீர் செல்வதால் வீரசோழனாற்றின் குறுக்கே இருந்த நடைபாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஆற்றை சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பொறையாறு,

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வருகிறது. இதேபோல் பொறையாறு அருகே திருவிளையாட்டம் ஊராட்சி குறும்பக்குடி கிராமத்தில் உள்ள வீரசோழனாற்றில் தற்போது அதிக அளவில் தண்ணீர் செல்கிறது.

இந்த பகுதி கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் வீரசோழனாற்றில் தண்ணீர் செல்வதால் ½ கி.மீட்டர் தூரம் சுற்றி சென்று பஸ் ஏறி செல்ல வேண்டும். ஆனால் வீரசோழனாற்றை கடந்து சென்றால் விரைவாக சென்றுவிடலாம். இதனால் வீரசோழனாற்றின் குறுக்கே பனைமரங்களை கொண்டு நடைபாலம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த நடைபாலம் வலுவின்றி ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்த செய்தி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’ நாளிதழில் நகர்வலம் பகுதியில் பிரசுரிக்கப்பட்டது. ஆனால், புதிதாக பாலம் அமைக்கப்படவில்லை.

தற்போது வீரசோழனாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால், வீரசோழனாற்றின் குறுக்கே வலுவிழந்த நிலையில் இருந்த நடைபாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் வீரசோழனாற்றை சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே, வீரசோழனாற்றை கடந்து செல்லும் வகையில் புதிய கான்கிரீட் பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story