சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும்


சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:00 AM IST (Updated: 19 Aug 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம்,

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ. சின்னதுரை, முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இளைஞர் அணி நிர்வாகி சந்திரமோகன் வரவேற்றார்.

இதில், தி.மு.க. தலைவர் கருணாநிதி 50 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை முதல்-அமைச்சராகவும் இருந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அவருடைய மறைவு தமிழ் மக்களுக்கும், கட்சியினருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவருக்கு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்து தலைமை மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று விரைவில் புதிய வெண்கல சிலை நிறுவப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வெண்ணிலா சேகர், சுரேஷ்குமார், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் சங்கர், ஊராட்சி செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு வீரபாண்டி ஆ.ராஜா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Next Story