செங்கல் சூளை அமைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் துரை.சந்திரசேகரன் பேட்டி


செங்கல் சூளை அமைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் துரை.சந்திரசேகரன் பேட்டி
x
தினத்தந்தி 18 Aug 2018 10:45 PM GMT (Updated: 18 Aug 2018 8:42 PM GMT)

கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் ஆற்றங்கரையில் செங்கல் சூளை அமைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ளது ஆச்சனூர் கிராமம். கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆச்சனூரில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இந்த பள்ளியை திருவையாறு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வானராங்குடி, பொதகிரி, மருவூர், வைத்தியநாதன்பேட்டை, புனல்வாசல், விளாங்குடி, ஒக்கக்குடி, அனைக்குடி உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வானராங்குடி, பொதகிரி, மருவூர், வடுகக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருந்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செங்கல் சூளை அமைக்க அனுமதி அளித்து உள்ளனர். இந்த கிராமங்களில் செங்கல் சூளை பயன்பாட்டுக்காக ஆற்றங்கரையில் 100 அடி ஆழம் வரை மண் எடுத்து உள்ளனர்.

இதனால் ஆற்றில் கசிவு ஏற்பட்டு உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான். இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றில் 2005-ம் ஆண்டு 4 லட்சம் கனஅடி தண்ணீர் சென்றது. ஆனால் தற்போது 2 லட்சம் கன அடி தான் தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் கரை உடையும் அபாயம் உள்ளதாக கூறுகிறார்கள். தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளாத தமிழக அரசின் அலட்சியம் தான் இதற்கு காரணம். தற்போது காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால், தஞ்சை ஒன்றியத்தின் ஒரு பகுதி, பூதலூர் ஒன்றியம், ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. சரியாக தூர்வாராததால் இந்த நிலை நீடிக்கிறது.

ஒரு சில நாட்களில் இதை சரி செய்யாவிட்டால், அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் குழந்தைகள் இறங்காத வகையில் பெற்றோர் கவனித்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது பூதலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்லக்கண்ணு, திருவையாறு ஒன்றிய செயலாளர் சிவசங்கரன், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் அரசாபகரன், மாவட்ட அவை தலைவர் தண்டபாணி ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story