தம்பிக்கோட்டை வடகாடு பிரிவு வாய்க்காலுக்கு தண்ணீர் வராததை கண்டித்து சாலை மறியல்


தம்பிக்கோட்டை வடகாடு பிரிவு வாய்க்காலுக்கு தண்ணீர் வராததை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:30 AM IST (Updated: 19 Aug 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

தம்பிக்கோட்டை வடகாடு பிரிவு வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் வராததை கண்டித்து தாமரங்கோட்டையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா கல்லணை கால்வாயின் கடைமடை பாசன பகுதியாகும். கல்லணையில் கடந்த மாதம் 22-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டு காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து கடலில் கலந்து வீணாகும் நிலையில் கல்லணைக்கால்வாய் கடைமடை பாசன வாய்க்கால்களான தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால், கல்யாணஓடை வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் தஞ்சை மாவட்ட கடைமடை பகுதியில் சம்பா சாகுபடி நடைபெறவில்லை. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் தினமும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தம்பிக்கோட்டை வடகாடு பிரிவு வாய்க்காலுக்கு தண்ணீர் வராததை கண்டித்து நேற்று காலை பட்டுக்கோட்டை தாலுகா தாமரங்கோட்டை வாட்டாகுடி பாலம் அருகில் தம்பிக்கோட்டை வடகாடு பிரிவு வாய்க்கால் கடைமடை பகுதியை சேர்ந்த தாமரங்கோட்டை வடக்கு, தாமரங்கோட்டை தெற்கு, சுந்தரநாயகிபுரம், பரக்கலக்கோட்டை, தம்பிக்கோட்டை மறவக்காடு ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தி.மு.க.வை சேர்ந்த சி.முருகப்பன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.ஆர்.நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஏ.கோவிந்தசாமி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.கல்யாணசுந்தரம், பா.ஜனதா கட்சியை சேர்ந்த அய்யாவு, ம.தி.மு.க.வை சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் தொடர்ந்து 2 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தம்பிக்கோட்டை வடகாடு பிரிவு வாய்க்காலுக்கு தண்ணீர் விடக்கோரி ஒப்பாரி வைத்தனர். இந்த போராட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் மகாலெட்சுமி, தாசில்தார் சாந்தகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகவேல், உதவி பொறியாளர் சசிகலா, துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கடைமடை பகுதிக்கு 1 வாரத்தில் தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு ஏரி குளங்கள் நிரப்பப்படும் என்று உறுதி அளித்தனர். இதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். 

Next Story