பஸ் வசதி செய்து தர கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்


பஸ் வசதி செய்து தர கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:15 AM IST (Updated: 19 Aug 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

பஸ் வசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் அருகே உள்ள மங்கபட்டிபுதூர், செம்பட்டு ஆகிய கிராமங்களிலிருந்து சுமார் 30 மாணவ, மாணவிகள் உப்பிலியபுரம், வைரிச்செட்டிப்பாளையம், ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று படித்து வருகிறார்கள். இவர்கள் பள்ளிவிட்டு வீட்டிற்கு வர சரியான நேரத்தில் பஸ் வருவதில்லை. இதனால், வீட்டிற்கு நேரத்தோடு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் நடந்து செல்வதால் இரவு 7 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. பஸ் வசதி செய்து தரக்கோரி பல முறை அரசு போக்குவரத்து கழகத்தில் மனு கொடுத்தும் பலனில்லை.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து 5.30 மணியளவில் செம்பட்டு செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். ஆனால், செம்பட்டு கிராமத்திற்கு பஸ் போகாது என்று கூறி மாணவ, மாணவிகளை கண்டக்டர் கீழே இறக்கி விட்டார். இதனால், மங்கப்பட்டிபுதூர் கிராமத்தில் துறையூர்-தம்மம்பட்டி சாலையில் மாணவ- மாணவிகள் தங்களுக்கு சரியான நேரத்தில் பஸ்விடாததை கண்டித்தும், செம்பட்டு கிராமத்திற்கு பஸ் விடக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பொது மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் அரசு போக்குவரத்து கழக இளநிலை பொறியாளர் ராஜா, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்குமார், செல்வராஜ் ஆகியோர் சாலை மறியிலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் பேச்சு வார்த் தை நடத்தினார்கள். அப்போது, அரசு போக்குவரத்து அதிகாரி ராஜா, பஸ் விட நடவடிக் கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொ டர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால், துறையூரிலிருந்து தம்மம்பட்டி, ஆத்தூர், சேலம், ராசிபுரம், முள்ளுக்குறிச்சி செல்லும் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. 

Next Story