‘பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை காலதாமதமின்றி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்’ - அலுவலர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவு


‘பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை காலதாமதமின்றி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்’ - அலுவலர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2018 5:00 AM IST (Updated: 19 Aug 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை காலதாமதமின்றி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு பதிவுகள் குறித்து மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழும் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளும் பொது சுகாதார துறையின் கீழ் ஒரே மாதிரியான civil registration system என்னும் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 1.10.2017 முதல் அனைத்து பிறப்பு, இறப்பு பதிவுகளும் 100 சதவீதம் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மேற்கொண்டு எந்தவித காலதாமதமும் இன்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும்.

கிராமங்கள், பேரூராட்சி பகுதிகள், நகராட்சி பகுதிகளில் செயல்படும் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அனைத்து தகவல்களும் பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும். பிறப்பு, இறப்பு பதிவாளர்கள் இணையதளம் மூலம் பிறப்பு, இறப்பு பதிவுகளை மேற்கொள்வது குறித்து அனைத்து தகவல்களையும் பொதுமக்களுக்கு தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பாலுசாமி, ஜெமினி மற்றும் அனைத்து நகராட்சி ஆணையர்கள், தாசில்தார்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், புள்ளியியல் உதவியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story