விவசாயத்தை பாதுகாக்க காவிரியில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்


விவசாயத்தை பாதுகாக்க காவிரியில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் -  டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 18 Aug 2018 11:30 PM GMT (Updated: 18 Aug 2018 10:43 PM GMT)

விவசாயத்தை பாதுகாக்க காவிரியில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று பண்ருட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

பண்ருட்டி,

கடலூர் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் இளைஞர் எழுச்சி ஆண்டு, ஊழல் ஒழிப்பு ஆண்டு பொதுக்கூட்டம் பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் குமாரகிருஷ்ணரெட்டியார் தலைமை தாங்கினார்.

மாநில தலைவர் ஜி.கே.மணி, பொருளாளர் திலகபாமா, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, புதுவை மாநில அமைப்பாளர் தன்ராஜ், மாநில துணை பொது செயலாளர்கள் பழ தாமரைக்கண்ணன், அசோக்குமார், முன்னாள் துணை பொது செயலாளர் தர்மலிங்கம், மாநில துணை தலைவர்கள் வைத்தியலிங்கம், சண்முகம், முருகவேல், செந்தில்குமார்முதலியார், மகளிர் சங்க செயயாளர் தமிழரசி, மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். முன்னதாக மாவட்ட செயலாளர் சமட்டிக்குப்பம் ஆறுமுகம் வரவேற்றார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் இருக்கிற எல்லா நோய்களையும் விட ஊழல் தான் மிகவும் மோசமானது. ஊழல் இருந்தால் அந்த நாட்டில் வளர்ச்சி இருக்காது. உலகில் உள்ள 180 நாடுகளில் மக்கள் வாழ்வதற்கு தகுந்த நாடுகள் என்று பார்க்கும் போது, இந்தியா 80-வது நாடாக இருக்கிறது. நமது நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் ஊழல் அதிகம் செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. 50 ஆண்டுகாலமாக திராவிட கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்ததால் ஊழல் அதிகம் நடக்கிறது. இதனால் தமிழகத்தில் வளர்ச்சியே இல்லை.

காவிரியில் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. ஆனால் ஆற்றில் 50 அடி ஆழத்துக்கு மணல் அள்ளியதால் பள்ளங்கள் நிரம்பி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லவில்லை. விவசாயம் பாதுகாக்க வேண்டும் என்றால் காவிரியில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும்.

தமிழகத்தில் விவசாயமே இல்லை. நஞ்சையும், பூஞ்சையும் விளைந்த பூமி வீட்டுமனைகளாக காட்சி அளிக்கிறது. காவிரி ஆற்றில் 5 கி.மீ. தூரத்துக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். ஆனால் ஆறு சமவெளியாக இருக்கிறது எனவே தடுப்பணை கட்ட முடியாது என்று முதல்-அமைச்சர் தெரிவிக்கிறார். இதுகுறித்து அவருடன் விவாதிக்க அன்புமணி ராமதாஸ் தயாராக இருக்கிறார்.

ஏற்கனவே தி.மு.க. ஆட்சியின் போது, சட்டசபையில் பா.ம.க. சார்பில் தடுப்பணை கட்டுவது குறித்து வலியுறுத்திய போது, துரைமுருகன் நீங்கள் ஆட்சிக்கு வந்து தடுப்பணை கட்டுங்கள் என்றார். நாங்கள் ஆட்சிக்கு வரத்தான் போகிறோம், தடுப்பணை கட்ட தான் போகிறோம்.

மக்கள் நினைத்தால் நல்ல தலைவரை உருவாக்க முடியும். தமிழகத்தில் 40 சதவீதம் மக்கள் இளைஞர்களாக உள்ளனர். அவர்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வர முடியும். வயதான பெண்களுக்கு அரசியல் தெரியாது. எனவே அவர்கள் பணம் வாங்கி கொண்டு வாக்கு செலுத்துகிறார்கள். பணம் கொடுத்தால் தான் ஓட்டு என்கிற நிலையை மாற்றக்கூடிய சக்தி இளைஞர்களிடம் உள்ளது. தமிழகத்தில் குடியில் அழிந்த குடும்பங்கள் ஏராளம். இதை மாற்ற வேண்டும். காமராஜர் 8 அமைச்சர்களை வைத்து திறமையாக ஆட்சி செய்தார். அதுபோன்ற ஆட்சி வர வேண்டும்.

தமிழகம் சிங்கப்பூரை போல் மாற வேண்டுமா இல்லையெனில் சோமாலியா சூடான் போன்று மாற வேண்டுமா என்பதை வாக்காளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அரசியலை தூய்மை படுத்த படித்தவர்கள் ஒவ்வொருவரும் ஓட்டு போட வர வேண்டும். நாட்டில் உள்ள 5 கோடியே 95 லட்சம் வாக்காளர்கள் நினைத்தால் மாற்றம் வரும், இல்லையேனில் ஏமாற்றமும், அழிவும் தான் வரும். இன்னும் கீழே தமிழகம் சென்றுவிடும். அந்த நிலையை ஏற்படுத்த விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் மாநில துணை பொது செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் குபேரன், மாநில உழவர் பேரியக்க துணைதலைவர் கணபதி, மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜா, பண்ருட்டி தொகுதி அமைப்பு செயலாளர் நந்தகோபால், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேந்திரன், சமூக சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜகுருநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன், இளைஞர் அணி தலைவர் வாட்டர் மணி, நிர்வாகிகள் பிரேம்குமார், பாலு, பன்னீர்செல்வம், செந்தாமரை, அரிராமன், அய்யனார், வடிவேல், சுரேஷ், பண்ருட்டி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன், மாநில மகளிர் சங்க செயலாளர் சிலம்பு செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story