‘‘மாநகராட்சி நகர் பொறியாளர் இடமாற்றம்’’ அரசின் உத்தரவை பெற மறுத்ததால் இ–மெயிலில் அனுப்பி வைப்பு


‘‘மாநகராட்சி நகர் பொறியாளர் இடமாற்றம்’’ அரசின் உத்தரவை பெற மறுத்ததால் இ–மெயிலில் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 19 Aug 2018 5:27 AM IST (Updated: 19 Aug 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி நகர் பொறியாளர் இடமாற்றம் செய்யப்பட்ட அரசின் உத்தரவை அவர் நேரில் பெறாததால் இ–மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

மதுரை,

மதுரை மாநகராட்சி நகர் பொறியாளராக இருந்தவர் மதுரம் (வயது55). இவர் கடந்த 1993–ம் ஆண்டு மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்தார். இவர் செயற்பொறியாளராக இருந்த காலகட்டத்தில் தான் ஜவகர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் வைகை 2–ம் கட்ட குடிநீர் திட்டம், வைகை ஆற்றில் தடுப்பணை, வெள்ளக்கல்–சக்கிமங்கலத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இந்த திட்டத்திற்காக மதுரை மாநகராட்சி சார்பாக டெல்லி சென்று திட்ட அனுமதியை பெற்று வந்ததில் மதுரம் முக்கிய பங்காற்றினர். அதன்பின் நகர் பொறியாளராக பதவி ஏற்ற பின் ஆம்னி பஸ் நிலையம், தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றியது உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ரூத் திட்டம் ஆகியவற்றுக்கான திட்டங்களை அவர், தயாரித்து மத்திய அரசின் அனுமதியை பெற்றார். குறிப்பாக மிகவும் சவாலாக இருந்த முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரை நகருக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றார். தற்போதைய நிலையில் பல கோடி மதிப்பிலான மாநகராட்சி திட்டங்களுக்கு டெண்டர் விடும் பணி தொடங்கி உள்ளது.

இந்த சூழ்நிலையில், நகர் பொறியாளர் மதுரம், தூத்துக்குடி மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. எனவே மதுரத்தை மதுரை மாநகராட்சி பணியில் இருந்து விடுவிப்பதற்கான ஆணையை மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ் சேகர் கடந்த 16–ந் தேதி இரவு பிறப்பித்தார். உடனடியாக இந்த உத்தரவை எடுத்து கொண்டு மாநகராட்சி பணியாளர் ஒருவர் இரவு 10.30 மணியளவில் மதுரம் வீட்டிற்கு சென்றார். ஆனால் அப்போது அவர், இந்த உத்தரவை பெற மறுத்து விட்டார். எனவே மாநகராட்சி சார்பில் அவரது இ–மெயிலுக்கு உத்தரவு அனுப்பப்பட்டது. மாநகராட்சி சார்பில், பணி விடுவிப்பு உத்தரவு இ–மெயிலில் அனுப்பியது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறும் போது, ‘‘நகர் பொறியாளர் மதுரத்திற்கு, மாநகரில் பல திட்டங்களை கொண்டு வந்த பெருமை இருந்தாலும், அவர் மீது தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. உதாரணத்திற்கு ஆம்னி பஸ் நிலைய கட்டுமானத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக விசாரணை கூட நடந்தது. தொடர் ஊழல் புகார் காரணமாக தான், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளார். ஆனால் அவரின் இடமாற்ற உத்தரவை இரவில் வீட்டிற்கு சென்று கொடுத்தது மனித உரிமை மீறிய செயல் தான் என்றனர்.

இதுகுறித்து மதுரத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

கடந்த 16–ந் தேதி இடமாறுதல் உத்தரவு குறித்த தகவல் கிடைத்தவுடன், அன்றைய தினம் பகலில் மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரை சந்தித்து பணி விடுவிப்பு ஆணை வழங்கும்படி கேட்டேன். ஆனால் அவர் இது வரை அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லை என்று கூறிவிட்டார். ஆனால் அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு வீட்டுக்கு கொடுத்து அனுப்பினர். 25 ஆண்டுகள் மாநகராட்சியில் பணியாற்றிய எனக்கு இரவு நேரத்தில் பணிவிடுவிப்பு ஆணையை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இ–மெயிலில் அனுப்பியது எனக்கு தெரியாது. ஆனால் இன்று (நேற்று) காலை நான் நேரில் சென்று உத்தரவை பெற்றுக்கொண்டேன். என் மீது ஆயிரம் புகார்கள் இருக்கும். ஆனால் அதில் எதுவும் உண்மை இல்லை. அரசின் விதிப்படி தான் டெண்டர் கொடுப்பேன். நான் ஊழல் செய்ததாக வழக்குகள் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story