நாகர்கோவிலில் பிரபல கஞ்சா வியாபாரி கைது


நாகர்கோவிலில் பிரபல கஞ்சா வியாபாரி கைது
x
தினத்தந்தி 20 Aug 2018 4:30 AM IST (Updated: 19 Aug 2018 10:17 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஒழுகினசேரி புதுகிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 42). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது கோட்டார், வடசேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏராளமான கஞ்சா வழக்குகள் உள்ளன. இவர் போலீசார் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை 4 முறை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். கடைசியாக கைது செய்யப்பட்டபின் கடந்த 6 மாதங்களுக்கு முன் விடுதலையானார்.

எனினும் அந்தோணி மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறாரா? என்று தனிப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அந்தோணி மீண்டும் கஞ்சா வியாபாரத்தை தொடங்கி இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்தோணியை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அப்டா மார்க்கெட் பகுதியில் அந்தோணி கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்தோணியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் 3 கிலோ 200 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து அவர் கஞ்சா வைத்திருந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story